விடுதலைப் புலிகளின் தலைவரின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை சந்தித்து, சமாதான பேச்சு தொடர்பான தகவலை பரிமாறினேன் என தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.
27.02.2022 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் திகதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.
அவர் தமது கருத்துரையில் கூறியதாவது,
இந்தக் கலந்துரையாடலின் தலைப்பு 13 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தைப் பலப்படுத்தி அதன் மூலம் மாகாண சபையைப் பாதுகாத்தல். இந்த இரண்டு வார்த்தைகளிலும் மிக முக்கியமான கருத்து இழையோடுவதாக நான் பார்க்கிறேன். அதைப் பலப்படுத்தல் என்பது இப்போது இருக்கிற மாகாண சபை முறைமையினுடைய செயற்பாடுகளில் தேவையான பலவீனங்களை நீக்கி அதைப் பலப்படுத்துவது என்பது ஒரு வாதம். மாகாண சபையைப் பாதுகாத்தல், அந்த முறைமையைப் பாதுகாத்தல் என்று சொன்னால் அதற்கு ஏதோவொரு ஆபத்து இருக்கின்றது என்பது தெளிவுபடுகிறது. இந்த நாட்டின் அரசாங்கம் தற்பொழுது கசிய விட்டிருக்கின்ற கருத்து ஒரு புதிய அரசியல் அமைப்பு மூலமாக மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கான எத்தனத்திலே இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதை நோக்கியதாக இந்த கலந்துரையாடல் அமைகின்றது.
நான் முதலிலே ஒன்றை தெளிவுபடுத்தி விட வேண்டும். நான் அரசியல் பேசமாட்டேன். பேசவும் தேவையில்லை. ஆனால் நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய உறுப்பினராகவும், அந்தக் கட்சியினுடைய ஒரு சிரேஷ்ட உபதலைவராகவும் இருக்கிறேன்.
1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி வரித்துக் கொண்ட இன்று வரை நிலையாக கடைப்பிடித்து வருகின்ற சமஷ்டிக் கோட்பாட்டின் கொள்கையிலிருந்து நாங்கள் எப்பொழுதும் விலகவில்லை. ஆகவே, அதுதான் எங்களுடைய இலக்கு, இலட்சியம், நோக்கம் என்பதை வலியுறுத்துக் கொண்டு என்னுடைய கருத்தை நான் சொல்ல விரும்புகின்றேன்.
இந்த மாகாண சபை முறைமை தொடர்பாக மதிர்ப்பார்ந்த நீதிபதி விக்னராஜா அவர்கள் சொன்னது போல இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக அல்லது அதன் அடிப்படையில் எழுந்த ஒன்று என்று நாங்கள் பார்க்கின்றோம். அந்த மாகாண சபை முறைமை எந்தக் காலத்திலும் தமிழ்த் தேசிய இனத்தினுடைய அரசியல், அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக நாங்கள் மட்டுமல்ல தமிழ்த் தேசியம் சார்ந்த எந்தக் கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லை அதைத் தெளிவாகவே இங்கே கூறப்பட்டது போல திரு அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் போன்றவர்கள் அப்பொழுது இந்த இந்திய – இலங்கை ஒப்பந்ததை நிறைவேற்ற முயலுகின்ற ராஜீவ் காந்தி அவர்களுக்கு தெளிவாக எழுத்து மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகவே, மாகாண சபை முறைமை என்பது எங்களுடைய சமஷ்டிக் கோரிக்கைக்கோ அல்லது தன்னாட்சிக் கோரிக்கைக்கோ அல்லது தாயகக் கோரிக்கைக்கோ மாற்றீடானது அல்ல. அவ்வாறு நாங்கள் சிந்திக்கவும் இல்லை. இந்த இந்திய – இலங்கை ஒப்பந்தம் அதிலே இரண்டு மூன்று விடயங்கள் எங்களுக்கு மிகப் பெரிய சாதகமாக அமைகின்றது. அதிலே பந்தி 1.4 வடக்கு – கிழக்கு தமிழ்த் தேசிய மக்களுடைய தாயகம் என்பதை வரலாற்று ரீதியான தாயகமாக அங்கீரிக்கின்றது. இது ஒரு சர்வதேச இரு தரப்பு ஒப்பந்தம். சர்வதேச சட்ட வலுவானது. அதிலே பந்தி 2.18 அதுதான் முக்கியமானது. நீதிபதி அவர்கள் குறிப்பிட்டது போல. மொழி சார்ந்தது. சிங்களம் உத்தியோகபூர்வ மொழியாக இருந்தாலும் தமிழும் ஆங்கிலமும் உத்தியோகபூர்வ மொழி ஆகும் என்ற ஏற்பாடு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பந்தி 2.18 இல் இருக்கிறது.
அதையேதான் அரசியலமைப்பினுடைய 18 ஆவது உறுப்புரையிலேயே திருத்தமாக 13 ஆவது திருத்தினுடாகத்தான் அது அரசியலமைப்பிலே சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லது நிராகரிக்கிறோம் என்று சொன்னால் இந்த தமிழ் மொழியினுடைய தேசிய அந்தஸ்து, அரச மொழி அந்தஸ்து, மற்றும் 16 ஆவது திருத்தத்தின் மூலம் வடக்கு கிழக்கினுடைய நிர்வாக மொழியாக, அரச கரும மொழியாக தமிழை சட்டபூர்வமாக ஏற்றுக் கொண்டதை நாங்கள் நிராகரிக்கிறோமா என்று நான் கேட்க விரும்புகின்றேன்.
ஆகவே, 13 ஆவது திருத்தம் என்பது. உண்மையாக தமிழ் மக்களுடைய அரசியல் இலக்கை அடைவதற்கான ஒரு கட்டமைப்பு அல்ல. அது என்னவென்றால் உலக வரலாற்று ரீதியிலே ஐக்கிய நாடுகள் கோட்பாட்டிலே எங்கு எங்ககெல்லாம் தேவை இருக்கிறதோ எந்த அளவுக்கு அரசியல் எங்கு பகிரப்பட வேண்டுமோ எந்த எல்லைக்கு அது கொண்டு போகப்பட வேண்டுமோ என்றால் அந்த இடத்துக்கு அதிகாரத்தை சமஸ்டி கோட்டிபாட்டின் அடிப்படையில் பகிரலாம். அல்லது பரவலாக்கலாம். அந்த அடிப்படையிலேயே எழுந்தததுதான் இந்த மாகாண சபை திட்டம், சட்ட ஏற்பாடு. ஆகவே இது தமிழர்களுக்காகதான் ஏற்பாடு செய்தது என்றால் ஒருவேளை அப்படி சிந்தித்திருக்கலாம். ஆனால் நடைமுறையிலேயே எங்களுக்காக ஒரு சட்டம் என்றால் அது வடக்கு கிழக்குக்கு மட்டுமே இருந்திருக்கவேண்டும். அது அப்படி இருக்கவில்லையே. முழு நாட்டுக்கான ஊராட்சி முறைமைகள் போன்ற ஒரு சட்டம்தான் மாகாண சபை முறைமையும் அந்த சட்டமும். ஆகவே இதைப் பெரிய அளவிலே அரசியல் தீர்வாகவும், ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் நாங்கள் அரசியல் தீர்வுக்கு மாறுபடுகின்றோம் என்னும் எதிர்க்கருத்து வலுவானதல்ல. இது ஒரு சாதாரண அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு சம்பந்தப்பட்ட ஒரு அதிகாரம்.
இந்த இடத்திலே ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பலருக்கு அநேகமாகத் தெரியாத விடயம். 1991 ஆம் ஆண்டு பிரேமதாச அவர்களுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அந்த நேரத்திலே விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலம். அவர்கள் அதிலே தலையீடு செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு பேச்சுவார்த்தையை உருவாக்க விரும்பினார்கள். அந்த விடயத்திலே தேசியத் தலைவர் அவர்களினுடைய நேரடி வேண்டுகோளிலே அல்லது பணிப்புரையிலே நான் பிரேமதாச அவர்களைச் சந்தித்த பொழுது, தேசியத் தலைவர் மூன்று விடயங்கள் சொன்னார்கள். அதைச் சொல்ல விரும்பவில்லை. முக்கியமாக ஒரு விடயத்தை சொல்கிறேன். அரசியல் சம்பந்தமாக அவர் கேட்டால் நான் என்ன சொல்வது என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் எனக்குச் சொன்ன விடயம். அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய கட்டமைப்பு ஒன்றை நாங்கள் பரிசீலிக்கத் தயார் என்று சொல்லச் சொன்னார். இதற்கு பல அர்த்தம் இருக்கின்றது. அதை நான் பிரேமதாச அவர்களுக்குச் சொன்னேன். We are prepred to Consider a structure that would, provide for optimum power sharing இதிலே ஒரு முக்கியமான ஒருவிடயம் இருக்கின்றது. அவர் எந்தக் கட்டமைப்பு என்று சொல்லவில்லை. அதை நாங்கள் ஏற்கிறோம் என்றும் சொல்லவில்லை. நாங்கள் பரிசீலிக்கத் தயார் என்பதுதான்.
ஆகவே இந்தக் கட்டமைப்பு என்பது பெரிய விசயம் இல்லை. மாகாண சபை முறைமையிலே முழுக்க ஒன்றுமே இல்லை என்று சொல்ல முடியாது. அது ஒரு உள்ளூராட்சி மன்றத்துக்கு மேற்பட்டதாகப் பார்த்தோமானால் இலகுவாக அதனுடைய தேவை தெரியும். ஏன் சிங்கள தேசத்திலே அந்த இனவாத கருத்துடையவர்கள் கூட மாகாண சபை முறைமையை பாவிக்கிறார்கள். இன்றும் அவைத் தலைவர்களினுடைய இணையத்தில் நான் இருக்கிறேன். இன்றும் அவர்களைச் சந்திக்கிறேன். அவர்களும் இந்த முறைமை இருக்க வேண்டும் என்றுதான் சொல்கின்றார்கள். ஆளுநர் முறைமை வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள். Provincal council system should exist என்று வலுவாகச் சொல்கிறார்கள். ஏனென்றால் இது அதிகாரப் பகிர்வு. அதனையே பிரதிபலிக்கிறது. அது தேவை. மத்திய மயப்படுத்தலுக்கு எதிராக நிற்கிறார்கள். நாங்களும் அந்த வகையிலேதான் இந்த மாகாண சபை முறைமையை மேலாகப் பார்க்க வேண்டும்.
ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மாகாண சபையில் இருந்த நானும், திரு. நடராஜா, மதிர்ப்பாந்த தவராசா ஆகியோர் இந்த அவையில் இருக்கின்றோம். நாங்கள் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டிருக்கிறோம் என்பது உண்மை. அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் செய்யக் கூடிய பல விடயங்கள் அதிலே இருக்கின்றது. வெளியே தனியே பொலிஸையும் காணியையும் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அது தேவைதான். ஆனால் எவ்வளவு விடயங்கள் விவசாயம், உள்ளூராட்சி இப்படி எத்தனை விடயங்கள் அதிலே இருக்கின்றது. அதை நாங்கள் கையாளலாம். அதை இலங்கை பூராகவும் கையாள்வார்கள். நாங்கள் எங்களுடைய மக்களுக்காக, எல்லாக்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய சபையிலேயே பரிசீலித்து பல விடயங்களை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
ஆக மாகாண சபை முறைமை என்பதை பெரும் அரசியலுக்குள்ளே புகுத்தி, இது தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்று சொல்லி அதனாலே நாங்கள் சமஷ்டியை கைவிட்டிட்டோம் என்று சொல்கின்றனர். இது சமஷ்டிக்கு மாற்று அல்ல. சமஷ்டி முறைமையினுடைய அம்சங்கள் சில அங்கே உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மை. அதிகாரப் பகிர்வினுடைய சில அம்சங்கள் அதிலே இருக்கின்றது என்பது உண்மை. இல்லை என்று சொல்ல முடியாது. ஆகவே இருக்கின்றதை ஏன் நாம் விட வேண்டும். இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் அதுக்கு அடுத்தது என்ன? இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருகிறதோ இல்லையோ என்று என்னால் சொல்ல முடியாது. நான் நினைக்கிறேன் வராது என்று. அது என்னுடைய கருத்து. வராது. ஒருவேளை வந்தால், அது எங்களுக்கு மிகப் பாதகமாக இருக்கும்.
ஆகவே இருக்கிறதையும் இல்லாமல் செய்ய நாங்கள் முயல்வது தவறாகும். இந்த மாகாண சபை முறைமையை இலாவகமாக வினைத் திறனுடன் செயற்படுத்தக் கூடிய ஆற்றல் இந்த இனத்திற்கு இருக்கிறது. எங்களுடைய மக்களுக்கு அந்த ஆற்றல் இருக்கிறது. அந்த ஆளுமை எங்களிடம் இருக்கிறது. அதை நாங்கள் சில சமயங்களிலே செய்யவில்லை. அதுக்காக முறைமை தவறு என்று சொல்ல முடியாது. இது பாராளுமன்றத்திற்கும் உள்ளூராட்சிக்கும் இடைப்பட்ட ஒரு Intermediary. அவ்வளவுதான். அது மாகாணம் சம்பந்தமானது. இன்றைக்கு தென்னிலங்கை என்ன சொல்கின்றது. மாகாண ரீதியான கட்டமைப்பை அவர்கள் விரும்பவில்லை. மாவட்டத்திற்கு நாங்கள் முன்னுக்குப் 1981 இல் போனவர்கள். ஏனென்றால் நாங்கள் தமிழ் மக்கள் பலமாக பேசக் கூடாது என்பதற்காக, உரிமைகளைப் பேசக்கூடாது என்பதற்காக, அதற்கான ஒரு கட்டமைப்பு இருக்கக்கூடாது என்பதற்காகவேதான் சிங்கள தேசம் மாகாண சபை முறைமையை நீக்க முயற்சிக்கின்றது. இதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். நாங்கள் கூடி அழுவதற்கு என்றாலும், கூடி பேசுவதற்கு என்றாலும், கூடிக் குறைகளைச் சொல்வதற்கு என்றாலும் ஒரு ஜனநாயகத் தளம் வேண்டும். அந்த ஜனநாயகத் தளம் மாகாண சபை முறைமைதான். அரசியல் அபிலாஷைகளுக்கு மாற்றீடு என்று நாங்கள் சொல்ல வரவில்லை. அரசியலில் இருக்கக்கூடிய தேவைகளை ஓரளவு சில விசயங்களை வெளிக்கொண்டு வரமுடியும். பேச முடியும், பேசிய கட்டமைப்பு. ஆகவே இதனைப் பலபடுத்துவது என்பது வேறு விடயம். பலப்படுத்தலாம், 13 ஐப் பலப்படுத்தலாம். தேவைகள் இருக்கிறது. குறைபாடுகள் இருக்கிறது. அவற்றை நீக்கலாம். முயற்சி செய்யலாம். ஆனால் மாகாண சபை முறைமையை பாதுகாக்க வேண்டும் என்றால் It is a matter for the Parliament and the southern polity.
நாங்கள் ஒரு காலத்திலே என்னுடைய வயது அப்படியானபடியால் சில வரலாறுகள் என்னுக்குள் இருக்கிறது. ஆரம்பத்திலே சமஷ்டி கேட்டபொழுது எங்கள் எல்லாரையும் சேர்த்து ஏளனம் செய்தவர்கள் இருக்கிறார்கள். இப்பவும் இருக்கிறார்கள். முந்தியும் இருந்தார்கள். கட்சிகள் இருந்தன. இன்றைக்கு எல்லாரும் நாங்கள் ஒரு சமஷ்டி முறைமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுதான் எங்களுடைய இலக்கு. அதுதான் எங்களுடை நோக்கம். அதுதான் எங்களுடைய அரசியல் எண்ணங்கள். நாங்கள் சரணடையவில்லை, கைவிடவில்லை. அப்படிஇருந்து கொண்டு இந்த இருக்கக்கூடிய 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் செய்து அதிலுள்ள குறைபாடுகளை நீக்கச் சொல்லி, எங்களுடைய ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அதிலே ஒரேயொரு விசயம் தந்தை செல்வா – பண்டாரநாயக்கா ஒப்பந்தம் 57 இல் தொலைந்ததும், அங்காலையும் எதிர்த்தார்கள். இங்காலையும் எதிர்த்தார்கள். இங்கும் வேண்டாம் என்றார்கள் அங்கும் வேண்டாம் என்றார்கள். கடைசியில் அவ் ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டது. இதையேதான் நாங்கள் செய்கிறோமா? இதைதான் நாங்கள் செய்யப் போகிறோமா?. நாங்கள் பேசாமல் இருக்கலாமே. அவன் வேண்டாம் என்றால் அதுக்காகவோ அவர்களை நாங்கள் எதிர்க்க வேண்டாமா?, அதை அழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால் அதனை நாங்கள் எதிர்க்க வேண்டாமா?, அதில் எங்களுக்கு ஏதோ இருக்கிறது என்று ஊகித்துத்தானே அதைச் செய்கிறார்கள். அதைக் கூட எங்களால் உணர முடியவில்லையா?
இதற்கு மேல நேரம் கருதி பேச விரும்பவில்லை. மாகாண சபை முறைமை என்பது இந்த நாட்டினுடைய அதிகாரப் பகிர்வு. ஏனென்றால் இந்திய – இலங்கை ஒப்பந்தமே எங்களுக்காக மட்டும் என்று சொல்லவில்லை. தேசிய நலன் சார்ந்தது என்றுதான் அதிலே இருக்கிறது. அதுக்காகத்தான் அது வந்தது. ஆனபடியால் 13 ஆவது திருத்தம் இருக்க வேண்டும். அதனாலேதான் இந்த மொழி உரிமை அரசியலமைப்புக்குள்ளே கொண்டு வரப்பட்டது. ஆகவே 13 ஆவது திருத்தம் பலப்படுத்தப்பட வேண்டும். மாகாண சபை முறைமை தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டும். பலப்படுத்தப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டும். மேன்மைப்படுத்தப்பட வேண்டும். அதனூடாக இந்த நாட்டில் முழு நாட்டிற்கும் ஒரு அதிகாரப் பகிர்வினுடைய முதற்படியாக, அதிகாரப் பகிர்வின் ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை தொடர்ந்து வலியுறுத்தி அதற்காக நாங்கள் நிற்கிறோம் என்ற ஒரு தெளிவான கருத்தை முன்வைத்து என்னுடைய கருத்துரையை நிறைவு செய்கிறேன். நன்றி.” என்று அவர் தனது கருத்துரையில் கூறினார்.