தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைனிய சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஒரே ஹோட்டல்களிலோ அல்லது ஒரே பிரதேசங்களிலோ தங்கியிருப்பதால், அவர்களுக்கு இடையே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஹோட்டல்களை கண்காணித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் வெடித்துள்ள யுத்தம் காரணமாக, விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், வன்முறை அதிகரிப்பதாலும் பல சுற்றுலாப் பயணிகள் வீடு திரும்ப முடியாமல் இங்கு சிக்கித் தவிக்கின்றனர்.
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஏறக்குறைய 4,000 உக்ரைனிய சுற்றுலாப் பயணிகளும் 10,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் தற்போது இலங்கையில் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். இவர்களின் விசா 2 மாதங்களிற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய சுற்றுலாப் பயணிகள் கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்தை உதவிக்கு வலியுறுத்தி கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
உக்ரைனில் ஏற்கனவே பல பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் போரை நிறுத்துமாறு ரஷ்யாவை வலியுறுத்தினர்.
நேற்று, இரு நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவை கட்டணமின்றி இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாகவும், ஹோட்டல்களும் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு கூறியது.
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையே வன்முறை மற்றும் பகை அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் குழுக்களிடையே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க உஷாராக இருக்குமாறு காவல்துறை மற்றும் ஹோட்டல்களுக்கு கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலானவர்கள் ஒரே ஹோட்டல்களில் தங்கியிருக்கிறார்கள். இரண்டு நாட்டினரும் வேறுவேறு இடங்களில் தங்க விரும்புவதாக அதிகாரப்பூர்வ கோரிக்கை எதுவும் இல்லை என்றாலும், இங்குள்ள அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும் நேற்று ட்விட்டரில் உக்ரைன் மற்றும் ரஷ்ய குழுக்களை கண்காணிக்கவும், அவர்கள் ஒரே விடுதிகளில் தங்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
இங்கு சிக்கித் தவிக்கும் உக்ரைனிய சுற்றுலாப் பயணிகளை தங்கள் வீடுகளுளில் தங்க வைக்க உள்ளூர் குடிமக்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தாலும், இப்போது அரசை நம்பியிருக்கும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு இதில் சாதகமான நிலைமை இல்லையென தெரிய வருகிறது.