மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் – பாகம் ஒன்று’ படத்தின் வெளியீட்டுத் திகதி, கதாபாத்திரங்களின் போஸ்டர்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகம் வெளியீட்டுக்குப் பிறகு, இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வெளியீடு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதிகாரபூர்வ தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 30ஆம் திகதி முதல் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனர் சுபாஸ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு, வெளியீட்டு திகதியுடன் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கேரக்டர்களின் புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என ஐந்து மொழிகளில் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.