ஐ நா மனித உரிமை ஆணையத்தின் ஜெனீவா அலுவலக உயர் அதிகாரிகளுடனான முக்கிய இணையவழி சந்திப்பு ஒன்று ஐந்து தமிழ் தேசிய கட்சி தலைவர்களுடன் 1- 03- 2022 இலங்கை நேரம் இரவு 7 மணிக்கு நடைபெற்றது.
இது தொடர்பில் ரெலோ அமைப்பின் ஊடகப் போச்சாளர் சுரேன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு 25 பெப்ரவரி 2022 திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பின்னர் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலக உயரதிகாரிகள் தமிழ்தேசிய கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கை மீதான 46/1 பிரேரணை கொண்டுவரப்பட்டு அதன் மீதான ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் மார்ச் 3ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட இருக்கும் வேளையிலே நடந்த இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இலங்கை சார்பில் வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ் தலைமையில் ஒரு குழுவினர் ஐநாவுக்கு நேரடியாக பயணம் செய்திருந்த வேளையில் இலங்கை தமிழ் மக்கள் சார்பில் ஐநா உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பு இதுவே ஆகும்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான நீதியரசர் திரு விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். உடல்நிலை காரணமாக திரு ஸ்ரீகாந்த அவர்கள் இறுதி நேரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.
ஆக்கபூர்வமான இந்த சந்திப்பு கலந்துரையாடல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.
இதில் யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறலுக்கான நீதிப் பொறிமுறை, தண்டனையின்மை நீடிப்பு, காணி அபகரிப்பு, குடிப்பரம்பல் சிதைப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம், பயங்கரவாதத் தடைச் சட்டம், அரசியல் கைதிகள், மற்றும் அரசுக்கு தேவையானவர்களுடைய விடுவிப்பு காணாமல் ஆக்கப்பட்டோர், அக்குடும்பங்களுக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக செயற்பாடுகள், மற்றும் புதிய ஏற்பாட்டில் சாட்சியங்கள், ஆதாரங்களைத் திரட்டுதல் என்பன பற்றி தமிழ் கட்சி பிரதிநிதிகளால் ஐநா உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அரசாங்கம் தனது தரப்பில் பலரை ஐநா அமர்வுக்கு அனுப்பி வைத்திருக்கும் இவ்வேளையில் தமிழர் தரப்பு பிரதிகளை ஐநா அலுவலர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமான நடைபெற்றது தமிழர் தரப்பின் மிகவும் முக்கியமான நகர்வாக கருதப்படுகிறது.
மேலும் கடந்த செப்டெம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு ஐந்து கட்சிகளினால் கையொப்பம் இடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் இம்முறை ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டு இருப்பதும் சுட்டிக் காட்டப் பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.