2001ம் ஆ்ணடு அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் மற்றும் இந்தியாவிலே செங்கோட்டை மீதான தாக்குதல் ஆகியன போன்று இன்று உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பின்நோக்கி தள்ளுமா என்ற அச்சத்தை தோற்றுவித்தள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இரண்டு வகையான இராஜதந்திர அடிகளை நாங்கள் வாங்கிக் கொண்டிருக்கின்றோம். அதில் ஒன்று ஏப்ரல் 21 தாக்குதலில் சிங்கள மக்களும், கிறிஸ்தவ மக்களும் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் மேற்குலகிற்கு ஒரு விடயத்தை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சொல்ல முயல்கின்றார்.
அதுதான் இல்ஙகையில் இடம்பெற்ற இன அழிப்பு போலவும், கட்டவிழ்க்கப்பட்ட யுத்தம் போலவும் வெளியில் பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே 2009ம் ஆண்டுக்கு முற்பட்ட 30 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழர்கள், அவர்கள் மீது வீசப்பட்ட பராஜ் குண்டுகள், பொசுபரஸ் குண்டுகள், அவர்கள் மீது வீசப்பட்ட கொத்தணிக் குண்டுகள் தொடர்பில் பல சாட்சியங்கள் இருந்தும் அவற்றை பேசாதும், அதுபற்றி எந்த கருத்தும் சொல்லாத கர்தினால், அவற்றை ஒருபக்கத்தில் மறைத்து அரசை காப்பாற்றிக்கொண்டு ஏப்ரல் 21 பிரச்சினையை பூதாகாரமாக வெளியில் காட்டி அதனை அவர் கொண்டு செல்வது தமிழர்களின் பிரச்சினை மனித உரிமை பேரவையில் 2ம், 3ம் இடத்திற்கு தள்ளப்படுவதற்கான ஆபத்தை தற்பொழுது சந்தித்திருக்கின்றது.
இரண்டாவதாக இன்று உலக வல்லரசாக இருக்கின்ற ரஷ்யா தன்னோடு இருந்த உக்ரைனுடன் தொடுத்திருக்கின்ற போர் அமைகின்றது. உக்ரைனிலும் ரஷ்சியாவிடம் இருப்பது போன்று 50 வீதமான அணுசக்தி ஆளுமை இருப்பதாக சொல்லப்படுகின்றது. அணு உலைகள் அங்கு இருப்பதாக சொல்லப்படுகின்றது.
2008ம் 2009ம் ஆண்டுகளில் எம்மீது தாக்குதல் மேற்கொள்வதற்கான விமானங்களை வழங்கிய நாடாக உக்ரைன் அந்த நாட்களில் இருந்தது. இவற்றையெல்லாம் கடந்தும் அங்கு ஆட்கள் கொல்லப்படுகின்றார்கள் எனவும், அங்கு ஆக்கிரமிப்பு யுத்தம் நடைபெறுகின்றது எனவும் ஜனநாயகத்திற்கு முரணானானது எனவும் தமிழர்கள் நாங்கள் அந்த நாட்டுக்காக குரல் கொடுக்கின்றோம். நிராகரிக்கவில்லை.
ஆனால் இந்த யுத்தம் சர்வதேச அரங்கிலே ரஷ்யா உக்ரைன் மீது எடுத்துள்ள மனித உரிமை மீறல், மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற செயல், மனித உரிமையை மதிக்கவில்லை என்ற செய்திதான் பெருமெடுப்பில் காட்டப்படுகின்றது. இவ்வாறு நாங்கள் பல தடவை தோற்றிருக்கின்றோம்.
2001ம் ஆ்ணடு அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது நடார்த்தப்பட்ட தாக்குதல், இந்தியாவிலே நடந்த செங்கோட்டை மீதான தாக்குதல் என்பன நாங்கள் விடுதலையின் உச்ச கட்டத்தினை தொடுகின்றபொழுது எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்ற முலாம் பூசப்படுவதற்கு காரணமாக அமைந்திருந்தது.
இப்பொழுதும் நாங்கள் பேசும் பொருளாக, இன அழிப்பு செய்யப்பட்டமை தொடர்பில் சொல்லப்படுகின்றபொழுது, கவனங்கள் வேறு திசைக்க குவிக்கப்படுகின்றன. உலகம் ஜனநாயகத்தையு்ம, ஒற்றுமையையும் விரும்புகிறதெனற்றால் அல்லது ஐக்கிய நாடுகள் சபை என்று ஒன்று இருக்கின்றது என்றால் அவர்களால் 12 வருடங்களாக கொண்டுவரப்பட்ட இந்த மனித உரிமை விடயங்களை தூக்கித்தள்ளிப்போட முடியாது. இதற்கு நீதி வழங்கியாகவேண்டும்.
இப்பொழுதும் அதில் கரிசனை செலுத்துக்னிறார்கள் என்பதை அண்மைநாட்களாக வருகின்ற செய்திகளில் நாங்கள் பார்க்கின்றோம். நாளை 3ம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் ஜெனிவாவிலே நடைபெறுவதாக இருந்தது. அது பிற்போடப்பட்டு வெள்ளிக்கிழைமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆகவே அங்கு கைவிடப்படவில்லை. விடயங்கள் கையாளப்படுகின்றன. ஆனால் வெளியிலிருந்து பார்க்கின்ற ஆய்வாளர்கள், செய்தியாளர்கள், ராஜதந்திரிகளின் பார்வை உக்ரைனைதான் பார்க்க வைக்கின்றது என தெரிவித்தார்.