எரிபொருள் கிடைப்பதன் அடிப்படையில் இன்று பேருந்து சேவைகள் 50 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்தார்.
அதன்படி வழக்கமாக ஆறு பயணங்களை இயக்கும் பேருந்துகள் இன்று மூன்று பயணங்களை மட்டுமே இயக்கும்.
போதுமான எரிபொருள் இருந்தால் மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும் என்றார். பிற்பகலில் பேருந்து பயணத்தை குறைக்குமாறு நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அலுவலக நேரங்களிலும் மற்றும் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் போது காலையிலும் மாலையிலும் பஸ் சேவைகள் வழங்கப்படும் என விஜேரத்ன கூறினார்.
எரிபொருள் கிடைக்கும் போது பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார், இருப்பினும் பெரும்பாலான நிரப்பு நிலையங்களில் நேற்று டீசல் இல்லை என்றார்.
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.