ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து இந்த கடித ஆவணத்தை அனுப்பியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.இந்த அமர்வின் போது இலங்கை தொடர்பில் தீர்மானம் எதுவும் இடம்பெறாத போதிலும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த உரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தனது அவதானிப்புகளை சமர்ப்பக்கவுள்ளார்.
இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியனவும், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி ஆகியனவற்றின் தலைவர்கள் கையெழுத்திட்ட ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் கையெழுத்திடுவதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதும், அவர் கையெழுத்திடவில்லை.
‘ஆவணத்தை பார்க்க தனக்கு நேரமில்லை. கடுமையான வேலைப்பளுவில் இருக்கிறேன்’ என அவர் பதிலளித்ததாக, இந்த கடித விவகாரத்தில் ஏற்பாட்டாளராக செயற்பட்ட ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.