வடமாகாண சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொண்டவர்களிடம் சரியான வகையில் 13 வது சட்டத்தில் உள்வற்றை உள்வாங்கி அதை எமக்கு ஏற்புடையதாக்கும் வல்லமை மட்டுமல்ல அதில் அக்கறையும் இருந்திருக்கவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம்சாட்டியுள்ளார்.
மாகாணசபையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக கடந்த அரசாங்கத்தின் திட்டங்களிற்கு பங்காளர்களாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, இன்று மாகாணசபை பறிபோகின்றது என கூக்குரல் இடுவது வேதனையானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் 13வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை பலப்படுத்தி அதனூடாக மாகாணசபைகளை பாதுகாப்பது தொடர்பான பொதுக் கலந்துரையாடல் ஒன்று இன்று (27) இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
சந்திரிகா அம்மையாரது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்ககளின் அபிலாசைகளை முற்றாக பூரணப்படுத்தக் கூடிய வகையில் கொண்டுவரப்பட்ட ஒரு திறமையான வரைபு எரிக்கப்பட்டது. குறித்த வரைபை அன்று எதிரணியிலிருந்து எரித்ததவர்களின் நிலைப்பாட்டை தவறென்று நான் கருதவில்லை.
ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறும் தரப்பினரும் அந்த வரைபை அன்றைய எதிர்த்தரப்பினருடன் இணைந்து எரித்திருந்தனர். அதை அன்று நான் நேரில் கண்டேன். இது மிகவும் ஒரு துரதிஸ்டவசமானதும் மாபெரும் தவறுமாகும். இதையடுத்த அந்த வரைபு கைவிடப்பட்டது.
அதன்பின்னர் பல முயற்சிகள் யோசனைகள் வந்திருந்தபோதும் கடந்த ஆட்சியில் தமிழர்களுக்கு எல்லா உரிமையும் வருகின்றதென கூறி ஒன்றை கொண்டுவந்தார்கள். அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
ஆகவே தமிழ் மக்களுக்கான 13 வது அதிகாரத்துடன் கூடிய சட்டத்தை மேலும் வலுவாக கொண்டு செல்லமுடியாமைக்கு தமிழ் தரப்பினரே முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர் என்பதே வரலாறு.
இந்த நிலையில் தீர்வு திட்டங்கள் நடைறையில் வருவதற்கான வாய்ப்புள்ளதா என்பதை நாம் ஆராய்ந்துகொள்ள வேண்டும். அதேநேரம் இருக்கின்றதை பாதுகாத்துக் கொள்வதற்கும் முயற்சிக்க வேண்டும்.
இதேவேளை இந்த 13வது திருத்த சட்டத்தில் ஒரு முக்கிய விடயமும் இருக்கின்றது. அதை தமிழ் தரப்பினர்தான் கைநழுவ விட்டுள்ளனர் என்றே கருதுகின்றேன்.
அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீட்டி பாருங்கள். அதில் ஒரு சரத்தில் குறிப்பட்ட திகதியொன்றை வரையறுத்து அத்திகதியிலிருந்து ஆயுதம் தாங்கிய தரப்பினர் அல்லது குழுவினர் தமது ஆயுதங்களை ஒப்படைத்தால் இலங்கை இராணுவம் குறிப்பாக முப்படையினரும் முகாம்களுக்கள் முடக்கப்படும் என்றுள்ளது. இதை தவறவிட்து யார்?
சுதந்திரத்திற்கு பின்னர் வேறு வேறு கொள்கைகளை கொண்ட கட்சிகளாக இருந்தாலும் பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் என்பன ஏற்பாடு செய்யப்பட்டது. அவையும் இல்லாது போய்விட்டது. ஆனாலும் அவற்றை விட ஒரு முன்னேற்றகரமான ஏற்பாடாகத்தான் இந்த 13வது திருத்த சட்டம் இருக்கின்றது.
இதை நாம் இறுகப்பிடித்தோமா என்றால் இல்லை. இதேநேரம் இந்த சட்டமூலத்தின் ஏற்பாட்டில் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால் இருப்பதையாவது பாதுகாப்போம் என்றால் அதுவும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணச உருவாக்கப்பட்டு ஒருவருடத்திற்கு சற்று கூடுதலாக சில மாதங்களே அது நடைமுறையில் இருந்தது. அதன்பின்னர் 25 ஆண்டுகள் வடக்கு கிழக்கில் மாகாணசபை இயங்கவில்லை.
ஏனைய மாகாணங்கள் இயங்கின. ஆனாலும் அதிலுள்ள அதிகாரத்தை வலுவாக்க அவர்கள் வடக்கு கிழக்கில் தமிழர்கள் மாகாண சபையை எப்போது ஏற்று நடைமுறைப்படுத்துவார்கள் என்றுதான் காத்திருந்தனர்.
இந்நிலையில் இக்காலத்தில் மாகாணத்துக்குரிய விடயங்கள் பலவற்றை மத்தி மெல்ல மெல்ல தனதாக்கிக் கொண்டது.
இதனிடையே 25 வருடங்களின் பின்னர் மாகாணசபை அதிகாரத்தை பெற்றுக்கொண்டவர்கள் அதன் அதிகாரத்தை கொண்டு என்ன செய்தார்கள்? அதன் அதிகாரத்தை வலுவாக்குவதில் என்ன பங்களித்தார்கள்?
வெறுமனே 440 பிரேரணைகளை கொண்டுவந்து நிறைவேற்றியதை தவிர வேறென்ன செய்தார்கள்?. மாகாண சபையின் அதிகாரத்தை முழுமையாக கொண்டுவர என்ன முயற்சிகளை செய்தார்கள்?. எதுவுமே இல்லை. இது வடக்கின் ஆட்சியாளர்கள் கண்ட தோல்வி அல்லது தவறவிட்ட சந்தர்ப்பம் என ஒப்புக்கொள்ள வேண்டும்.
சரியானவர்களை அந்த மாகாண சபைக்கு தெரிவு செய்து சரியான வகையில் 13வது சட்த்தில் உள்வற்றை உள்வாங்கி அதை எமக்கு ஏற்புடையதாக்கும் வல்லமை மட்டுமல்ல அதில் அக்கறையும் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. இதுவும் எமது தமிழ் மக்களின் தோல்வியாகவே காணப்படுகின்றது.
சரி அதிகாரங்களை இழந்து வருகின்ற நிலையிலும் இருக்கின்ற அதிகாரங்களையாவது பாதுகாப்போம் என்றால் கூட அதற்கும் அக்கறை காட்டவில்லை.
இதேவேளை இலங்கை அரசியல் சாசனத்தின்படி மாகாணசபை கலைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற வேண்டும் என இருக்கின்றது. அப்படியானால்’ ஏன் தேர்தல் நடைபெறவில்லை? இதற்கு காரணம் என்ன?
கடந்த ஆட்சியாளர்கள் மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என கூறி அதில் எல்லை மீள் நிர்ணயம் என்ற ஒன்றை கொண்டுவந்தது.
அதை மேற்கொள்ள குழு ஒன்றை அமைத்தனர். அவ்வாறு சட்ட ஏற்பாட்டை செய்திருந்தால் துறைசார் அமைச்சர் அதை இரு வாரங்களில் நாடாளுமன்றில் சமர்ப்பித்திருப்பார். சரி அதை நிறைவேற்ற மூன்றில்; இரண்டு பெரும்பான்மை வேண்டும். அதில் அது தோல்வி கண்டிருந்தால் அதற்கும் சட்ட ஏற்பாடு இருக்கிறது. அதுவும் நடைபெறவில்லை.
இதைவிடுத்து மாகாணசபையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக கடந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நடமுறைக்கு பங்காளர்களாக இருந்ததும் இன்று பறிபோகின்றது என கூக்குரல் இடும் தமிழ் தரப்பினர்தான் என்பதே வேதனையானது.
அதைவிட மாகாண சபை தேர்ல் நடைபெற வேண்டும் என கடந்த ஆட்சியில் இருந்த தமிழ் தரப்பினர் நினைத்திருந்தால் குறைந்தது அதை நிறைவேற்ற பாதீடுகளில் பேரம் பேசியிருந்திருக்கலாம். அதையும் செய்திருக்கவில்லை. இவையே இந்த மாகாணசபை முறைமை அதிகாரங்கள் பறிபோக காரணமாகியிருந்துள்ளது.
இந்நிலையில் இன்று பாரத பிரதமருக்கு கடிதம் எழுதுவதால் என்ன பலன் கிடைக்கப்போகின்றது என்றார்.