மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு எதிர்வரும் 1 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர்,திணைக்கள தலைவர்கள்,அரச தனியார் போக்குவரத்து சங்கத்தினர் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது எதிர்வரும் 1 ஆம் திகதி திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு குறித்தும், முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக போக்குவரத்து,சுகாதாரம்,பாதுகாப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் ஆலயத்திற்கு வருகின்ற மக்கள் ஒரு வழி பாதை ஊடாக மட்டுமே ஆலய வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என குறித்த கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.