உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினிடம் இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஐகர், உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டால் நிச்சயமாக போர் முடிவுக்கு வரும் என்று கூறியிருந்தார். பாரதப் போர் வியூகம், சாணக்கிய தந்திரம் ஆகியனவற்றைக் குறிப்பிட்டு உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தலையிடுமாறு அந்நாட்டுத் தூதர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நேர்மையான, உண்மையான பேச்சுவார்த்தைகளால் மட்டுமே ரஷ்யா மற்றும் நேட்டோ குழு இடையேயான பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
தவிர, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்களின் நலன் குறித்து பிரதமர் மோடி தனது அக்கறையை வெளிப்படுத்தினார். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைப்பதில் ரஷ்யா உதவ வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைன் மீதான இராணுவ தாக்குதல் குறித்த தகவல்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் இரு நாட்டுத் தலைவர்களும் வழக்கம் போல் தங்களின் பிராந்திய நலன் தொடர்பான விஷயங்களில் ராஜாங்க ரீதியாக தொடர்பில் இருக்கும் என்று பரஸ்பரம் ஒப்புதல் தெரிவித்துக் கொண்டனர்.
முதல் நாள் போரின் முடிவில், உக்ரைனின் கிழக்குப் பகுதி முழுவதுமே ரஷ்ய படைகள் ஆதரவு கொண்ட பிரிவினைவாதிகளின் கைகளுக்கு வந்துவிட்டது. தற்போது வடக்கே உள்ள நகரங்களில் ரஷ்ய இராணுவம் முன்னேறி வருகிறது.
உக்ரைனில் உள்ள 74க்கும் மேற்பட்ட ராணுவ கட்டமைப்புகள், 11 விமானப்படைத் தளங்களை தகர்த்துவிட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இரண்டாவது நாளாக தாக்குதலை ரஷ்யா தொடரும் நிலையில், விபத்துக்குள்ளாகி பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் செர்னோபில் அணு உலை ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.