இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) அறிவித்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன் நவம்பர் 08, 2021 அன்று தொடங்கியது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பேரணி மீது தாக்குதல் நடத்தி ஒருவர் கொல்லப்பட்டு இருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிரேமலால் ஜயசேகர மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன உள்ளிட்ட மூவருக்கு எதிராக இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வழக்கின் விசாரணையின் பின்னர் தீர்ப்பை அறிவித்த இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களை தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளிகள் என அறிவித்து 2020 ஜூலை 31 அன்று மரண தண்டனை விதித்தார்.
இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி தமக்கு மரண தண்டனை விதித்த விதம் சட்டத்திற்கு முரணானது என்பதனால் தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அதன்படி, மனுக்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மார்ச் 31ஆம் திகதி தீர்ப்பை வழங்க தீர்மானித்துள்ளது.