தமிழ்த் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, பாராளுமன்றத்திற்குள் ஆளுந்தரப்பினர் எகிறிக் குதித்தனர்.
நில அபகரிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆளுந்தரப்பினர் பதிலளித்தனர்.
வனவிலங்கு நிலப் பகுதிகள் மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் எக்காரணம் கொண்டும் சுவீகரிக்கப்பட மாட்டாது என அண்மையில் மன்னாரில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக அமைச்சர் சிபி ரத்நாயக்க தெரிவித்தார்.
அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று அறிவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளிக்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்ததாகவும், ஜனாதிபதி இல்லாததால் அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிவித்ததாக விஜேசேகர கூறினார்.
எனினும், அந்த வாய்ப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வு நெருங்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக விடயங்களை எழுப்பி சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.