தமிழ தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஜனாதிபதி கோட்டாபயவின் செய்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்டது.
வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும், மகாவலி எல் வலயமென்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், வினோநோகராதலிங்கம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இராசபுத்திரன் சாணக்கியன், த.கலையரசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நில அபகரிப்பு தொடர்பான சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
இதையடுத்து, ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் வந்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
நில விவகாரம் குறித்து அலரி மாளிகைக்கு சென்று பிரதமருடன் பேசுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாகவும், அடுத்த வாரத்தில் ஜனாதிபதி, ஜனாதிபதி செயலாளர், அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோருடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பிற்கு அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.