நுவரெலியா பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் பாரபட்சத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுதல் என்ற நிலையில் முற்போக்கு அரசியல் அணியைச் சேர்ந்த சிரேஷ்ட்ட சட்டத்தரணியான சிங்களவர் ஒருவர், சிறந்த மலையகத் தமிழ் சட்டத்தரணி ஒருவரை அடையாளம் காணுங்கள் என ஆலோசனை கூறுகிறார். மறுபக்கம் இதுவரை எந்தவொரு தமிழ்ச் சட்டத்தரணியும் எங்களைத் தொடர்பு கொள்ளவோ அல்லது தாங்களாக வழக்குத் தொடரவோ முன்வரவில்லை. அதே நேரம் இளம் சட்டத்தரணியான் ருடானி ஷாஹிர் தானாக முன்வந்து குறிப்பிட்ட விடயத்துக்காக வழக்கில் ஆஜராக தயார் என எம்மிடம் கலந்துரையாடியுள்ளார் என்பதை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன் என முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம்: சாத்தியப்பாட்டுக்கான வழிமுறைகள் எனும் தலைப்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைமையகத்தில் புதன் (23) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பிரதான பேச்சாளராக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமூகங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் என்பது ஒரு சமூகம் மற்றைய சமூகத்தைப் புரிந்து கொள்வதில்தான் தங்கி இருக்கிறது. ஒரு மலையகச் சமூகத்தை பொறுத்தவரையில் அவர்கள் மற்ற சமூகத்தைப் புரிந்து கொண்ட அளவுக்கு அவர்களை மற்றைய சமூகத்தினர் புரிந்து கொள்ளவில்லை என்பதே நிதர்சனமாகும். ஒரு சமூகத்தின் பிரச்சினையை அந்த குறித்த சமூகமே தீர்த்துக்கொள்ள வேண்டும் எனும் மனப்பாங்கு இலங்கையில் அரசியல், பண்பாட்டில் ஊறிப்போய் இருக்கறது.
நுவரெலியா பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் பாரபட்சத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு போதுமான நியாயங்கள் உள்ளன. அதற்கு முன்னால் அரசியல் ரீயதியாக இந்த பாரபட்சம் குறித்த நாட்டு மக்கள் கவனத்தைப் பெறுவதற்காகவே கையெழுத்து இயக்கம் இடம்பெறுகிறது. மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக நீதிமன்றம் செல்லும் வழிமுறைகளை நாம் மேற்கொள்வோம்.
நீதிமன்றத்தை நாடுதல் என்ற நிலையில் இளம் சட்டத்தணியான ருடானி ஷாஹிர் தானாக முன்வந்து இருக்கும் நிலையில் ஒரு முஸ்லிம் எனப்பார்க்காது,
சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க தூதூவராகப் பார்க்கிறேன். இத்தகையவர்களால் மட்டுமே நல்லிணக்கச் சாத்தியப்பாட்டுக்கான வழிமுறைகளைக் கண்டடைய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.