25.5 C
Jaffna
December 24, 2024
Pagetamil
உலகம்

உக்ரைனின் மீது ரஷ்யா ஏன் படையெடுக்கிறது?: ஒரு பின்னணிப் பார்வை!

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால் அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

தடையற்ற வர்த்தகம், முதலாளித்துவப் பொருளாதாரம், அதிக ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகர்வுக் கலாச்சாரம், பொழுதுபோக்குகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அவர்கள் பழைய சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பெட்டியான வாழ்க்கை முறையிலிருந்து சுதந்திரமான வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றனர். ஒன்றியம் என்ற வார்த்தையே அர்த்தமற்றுப் போன பிறகு மீண்டும், ரஷ்யாவின் பிடிக்குள் வாழ அவர்கள் அஞ்சுகின்றனர்.

பொருளாதாரத்தில் வளரும் நாடு உக்ரைன். மனித ஆற்றல் வளர்ச்சியில் உலகத்தில் 74வது இடத்தில் இருக்கிறது. வறுமையும் ஊழலும் அதிகம். வளமான விவசாய நிலம் இருப்பதால் வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கியமான நாடாகத் திகழ்கிறது.

இராணுவ பலத்தில் ரஷ்யா, பிரான்சுக்கு அடுத்து வருகிறது. குடியரசு நாடு, ஜனாதிபதி தலைமையிலான ஒற்றை ஆட்சி முறை நிலவுகிறது. நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை, சட்டமியற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று முக்கிய உறுப்புகளைக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி. பிரதமர் டெனிஸ் ஷைமிஹால்.

செல்வாக்கை மீட்க புடின் முயற்சி

ரஷ்யாவில் ஜனாதிபதி, பிரதமர், மீண்டும் ஜனாதிபதி என்று கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார் விளாடிமிர் புடின். மக்களுக்கு புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சியின் ஆட்சி அலுத்துவிட்டது. ஆரம்ப காலத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது இல்லை. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. ரஷ்ய அரசில் ஊழலும், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டும் போக்கும், சலுகைசார் முதலாளித்துவ ஆதிக்கமும் வளர்ந்து வருகின்றன. ஆட்சியில் தானே தொடர வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் வெவ்வேறு காரணங்களைக் கூறி ஒடுக்கி வருகிறார் புடின்.

மக்களுடைய ஜனநாயக விருப்பங்களுக்கு மேற்கத்திய நாடுகள் தூபம் போடுவதால், நாட்டை பழைய கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தைப் போல கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.

ரஷ்யாவிலேயே இயற்கை எரிவாயு, கச்சா பெட்ரோலிய எண்ணெய் கிடைப்பது அரசுக்குப் பொருளாதார வளத்தைத் தந்திருக்கிறது. சோவியத்கால இராணுவ பலம் அப்படியே குறையாமல் இருக்கிறது. எனவே இவற்றைக் கொண்டு தானும் ஒரு வல்லரசுதான் என்று நிரூபிக்க புடின் முயல்கிறார். புதிய வல்லரசாகவும் பொருளாதார வலிமை மிக்க நாடாகவும் வளரும் சீனா, ரஷ்யாவை நெருக்கமான நண்பனாகப் பெற்றிருக்கிறது.

ஐரோப்பாவிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றத் துடிக்கும் ரஷ்யாவுக்கும், சீனத்துக்கும் பொதுவான எண்ணமாக அமெரிக்க எதிர்ப்புணர்வு இருப்பதால் இரண்டும் இணைந்து செயல்படுகின்றன.

நெருக்கடி என்றால் சீனா நமக்குத் துணை நிற்கும் என்ற நம்பிக்கையில் அமெரிக்காவைச் சீண்டிப்பார்க்க விரும்புகிறார் புடின். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய அமெரிக்கா இப்போது தன்னுடைய நாட்டு தொழில், வர்த்தகத் துறை மீட்சியில் மட்டுமே அக்கறையாக இருக்கிறது. எனவே இந்த பலவீனமான நேரத்தில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வைக்க உக்ரைன் விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுகிறது ரஷ்யா.

இது இராணுவ பலக் கூட்டை அடிப்படையாகக் கொண்ட போட்டியாகவும் ஐரோப்பிய சந்தையை யார் பிடிப்பது என்ற வர்த்தகப் போராகவும் கூட இருக்கிறது.

அதைவிட முக்கியம் இரு பெரும் நாடுகளின் தலைவர்கள், தங்களுடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிடிவிடாமலிருக்க, தங்களை செல்வாக்குள்ள தலைவர்களாக காட்டிக் கொள்ளவும் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கி வருகின்றனர்.

முதல் இரண்டு உலகப் போர்களைவிட மிகப் பெரிய போருக்கு உக்ரைன் விவகாரம் இட்டுச் செல்லும் என்று ஊடகங்கள் அஞ்சும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இதற்கு ஒரே காரணம் உக்ரைன், ரஷ்யா இரண்டுமே அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ளன. மோதல் முற்றி போர் மூண்டால் அணு ஆயுதங்களை இரண்டும் பயன்படுத்தும் என்ற அச்சமும் ஏற்பட்டது. இதனாலேயே உலக நாடுகள் உக்ரைன் விவகாரத்தை கவனமாகப் பின்பற்றுகின்றன.

கொரோனா பெருந்தொற்று ஓயவில்லை. நோய்க் கிருமிகள் தொடர்ந்து உருமாற்றம் அடைகிறது. ஊரடங்கு உத்தரவுகள் மக்களுடைய அன்றாட வாழ்க்கையை மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் மிக மோசமாகப் பாதித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி இராணுவ ரீதியாகவும் எதையாவது சாதித்து விட வேண்டும் என்று சில நாடுகள் தீவிரம் காட்டுகின்றன.

ரஷ்யாவுக்கு அடுத்து பெரிய நாடு

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு உக்ரைன். பரப்பளவில் ரஷ்யாவுக்கு அடுத்த இடம், 6,03,628 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 4.13 கோடி. தலைநகரம் கிவாவ். சோவியத் ஒன்றியம் சிதறியபோது 1991இல் சுதந்திரம் பெற்றது. இதன் கிழக்கிலும் வட கிழக்கிலும் இருப்பது ரஷ்யா. வடக்கில் பெலாரஸ். மேற்கில் போலந்து, ஸ்லோவாகியா, ஹங்கேரி உள்ளன. தெற்கில் மால்டோவியா, ருமேனியா உள்ளன. ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் மிகப் பெரிய இராணுவ நாடு.

1994 இல் நேட்டோவுடன் கூட்டும் வைத்துக் கொண்டது. ஜனாதிபதியாக இருந்த விக்டர் யனுகோவிச் ரஷ்ய சார்பு உள்ளவர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்தார். அதை மக்கள் ஏற்கவில்லை. ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தினர். மக்களுடைய ஐரோப்பிய சார்பு கிளர்ச்சிக்கு ‘ஐரோப்பிய மைதான்’ என்ற பெயரே ஏற்பட்டது. யனுகோவிச் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

2014 மார்ச்சில் கிரீமியாவை ரஷ்யா தன்னுடைய நாட்டுடன் சேர்த்துக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆழமான – அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய விரிவான வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாக உக்ரைன் அறிவித்தது. அதை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது. இவ்வாறு உக்ரைன் ஐரோப்பிய நாடுகள் பக்கம் சாய்வது பின்னாளில் தனக்கு ஆபத்தாகிவிடும் என்று அஞ்சுவதால் ரஷ்யா தீவிரமாகத் தலையிடத் தொடங்கியது.

கிரீமியாவை ஆக்கிரமித்து தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டதைப் போல உக்ரைனையும் சேர்த்துக்கொள்ளப் பார்க்கிறது. இதனாலேயே ரஷ்யாவுக்கு அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

பக்கத்திலுள்ள வல்லரசுக்கு கோபமூட்டும் உக்ரைனின் போக்கு… பக்கத்திலுள்ள குட்டி நாடுகளெல்லாம் ‘சின்னத்தம்பிகளாக’ இருக்க வேண்டுமென்ற வல்லரசுகளிற்கே உரித்தான ‘பெரியண்ணன் போக்கு’ ரஷ்யாவிடம்உள்ளதுதான், இப்போதைக்கு உக்ரைன் நெருக்கடிக்கு ஒரே காரணம்.

இந்தப் பின்னணியில்தான் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

Leave a Comment