நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது திமுக கூட்டணி. 21 மாநகராட்சிகளையும் திமுக வசப்படுத்தியிருப்பது கவனத்துக்குரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்றதால் தேர்தல் அறிவிக்கை நாள் முதலே தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. கடந்த 19-ம் தேதி தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டன. காலை 10 மணிக்கே திமுகவின் வெற்றி முகம் தெரியத் தொடங்கியது. பின்னர், இது மகத்தான வெற்றியாக மாறியுள்ளது
திமுகவின் அமோக வெற்றி: திமுகவுக்கு 65% வரை நகர்ப்புற உள்ளாட்சிகளில் வெற்றி கிட்டும் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் கூட கணித்தனர். ஆனால், இறுதி நிலவரப்படி நிலவரப்படி கிட்டத்தட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 75%-க்கும் மேலான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளில் அனைத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது.
கடந்த 19 ஆம் தேதி சென்னையில் வாக்களித்துவிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், 21 மாநகராட்சிகளையும் நிச்சயம் திமுக கைப்பற்றும் என்று கூறினார். அதன்படியே வெற்றி கனிந்துள்ளது. வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம் என அனைத்திலும் அதிமுகவை மாநகராட்சிகளிலும் அப்புறப்படுத்தியுள்ளது திமுக.
பேரூராட்சிகளும் நகராட்சிகளும் கூட திமுக மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதிமுகவுக்கு அடுத்தாக பாஜக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெற்றியைப் பதிவு செய்திருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
மாநகராட்சியில் கட்சி வாரியாக வெற்றி சதவீதம்:
மொத்தம் 1,374 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடங்களில், இரவு 7.30 மணி வரை 1355 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 938 திமுக வேட்பாளர்களும், 164 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 71 பேரும், பாஜகவைச் சேர்ந்த 22 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 13 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 24 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த முடிவுகளின்படி, கட்சி வாரியாக மாநகராட்சி வார்டுகளின் வெற்றி விகிதம்: திமுக – 68.27% சதவீதம், அதிமுக – 11.94 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் – 5.24%, பாஜக 1.60 சதவீதம், சிபிஐ (எம்) – 1.75%, சிபிஐ – 0.95%.
நகராட்சியில் கட்சி வாரியாக வெற்றி சதவீதம்:
மொத்தம் 1,374 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடங்களில், இரவு 7.30 மணி வரை 1355 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 938 திமுக வேட்பாளர்களும், 164 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 71 பேரும், பாஜகவைச் சேர்ந்த 22 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 13 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 24 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த முடிவுகளின்படி, கட்சி வாரியாக மாநகராட்சி வார்டுகளின் வெற்றி விகிதம்: திமுக – 68.27% சதவீதம், அதிமுக – 11.94 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் – 5.24%, பாஜக 1.60 சதவீதம், சிபிஐ (எம்) – 1.75%, சிபிஐ – 0.95%.
நகராட்சியில் கட்சி வாரியாக வெற்றி சதவீதம்:
மொத்தம் 3,843 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 18 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3,842 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 2,360 திமுக வேட்பாளர்களும், 638 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 151 பேரும், பாஜகவைச் சேர்ந்த 56 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 19 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 41 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர தேமுதிகவைச் சேர்ந்த 12 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 3 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த முடிவுகளின்படி, கட்சி வாரியாக நகராட்சி வார்டுகளின் வெற்றி விகிதம்: திமுக – 61.41 சதவீதம், அதிமுக – 16.60 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் – 3.93%, பாஜக 1.46 சதவீதம், சிபிஐ (எம்) – 1.07%, சிபிஐ – 0.49% மற்றும் தேமுதிக – 0.31%
பேரூராட்சியில் கட்சி வாரியாக வெற்றி சதவீதம்:
மொத்தம் 7,621 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 196 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். ஒரு இடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் 12 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, 4 இடங்களில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு 7 மணி வரை 7603 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 4388 திமுக வேட்பாளர்களும், 1206 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 368 பேரும், பாஜகவைச் சேர்ந்த 230 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 26 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 101 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர தேமுதிகவைச் சேர்ந்த 23 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, திமுக வென்ற பேரூராட்சி வார்டுகளின் 57.58 சதவீதமும், அதிமுக 15.82 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் – 4.83%, பாஜக 3.02 சதவீதமும் ஆக உள்ளன. சிபிஐ (எம்) – 1.33%, சிபிஐ – 0.34% மற்றும் தேமுதிக – 0.30% ஆக உள்ளது.
65% வெற்றி கணிக்கப்பட்ட இடத்தில் 75%-யும் கடந்து க்ளீன் ஸ்வீப் நோக்கி திமுக கூட்டணி செல்வதற்கு என்ன காரணம் என்று அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது, 10 ஆண்டுகால இடைவெளியை முதல் காரணமாகப் பட்டியலிடுகின்றனர். 10 ஆண்டுகளாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பொதுமக்கள் எதற்கெடுத்தாலும் அதிகாரிகளையும் எம்எல்ஏ, எம்பிக்களையும் நமபி இருக்கும் சூழல் உருவானது. சில நேரங்களில் சிறிய பிரச்சினையை பெரிய இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் குழம்பி தவித்துள்ளனர். 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதலேயே இந்த நிலை என்று கூறுகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகளோ ஆட்சி அதிகாரம், பண பலம், பல இடங்களில் கள்ள ஓட்டு, மிரட்டல் என அச்சுறுத்தி திமுக கல்லா கட்டியிருக்கிறது எனக் கூறுகின்றன.
பாஜகவின் வெற்றிக் கணக்கு; அதிமுகவின் தப்புக் கணக்கு!
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்றுள்ள கணிசமான வெற்றி கவனம் பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததாகக் கருதி இந்தமுறை பாஜகவை கூட்டணியில் சேர்க்காத அதிமுக தப்புக் கணக்குப் போட்டுவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். வேலூரில் இஸ்லாமியர்கள் நிறைந்த மாநகராட்சி வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதை பாஜக தன் மீதான அடையாளத்தை மாற்றும் வெற்றியாகக் கருதுகிறது.
வேலூர் மாநகராட்சி 17வது வார்டில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் சுமதி
தமிழக பாஜக தலைவர், ஒவ்வொரு வீட்டிற்கும் பாஜகவை கொண்டு சேர்ப்போம் என்று அறிவித்து மேற்கொண்ட பிரச்சாரம் பலனளித்துள்ளது. அதனாலேயே 21 மாநகராட்சிகளில் மதுரை, கரூர், திருப்பூர், சிவகாசி, நாகர்கோவில், திருச்சி, தூத்துக்குடி என பல மாநகராட்சிகளிலும் கணிசமான வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது எனக் கூறுகின்றனர். அதிமுக அதிருப்தி வாக்குகள் பாஜகவுக்கு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பாமக பதிவு செய்த வெற்றி 120+
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில் 4 வார்டுகளிலும், நகராட்சிகளில் 48 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 73 வார்டுகளிலும் பாமக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆக, 125 வார்டுகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரையில் காஞ்சிபுரத்தில் 2 வார்டுகளிலும், கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் வேலூரில் தலா ஒரு வார்டிலும் வென்றுள்ளது.
நகராட்சிகளைப் பொறுத்தவரையில், சேலத்தில் 12 வார்டுகளிலும், ராணிப்பேட்டையில் 8 வார்டுகளிலும், கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 5 வார்டுகளிலும், அரியலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறையில் தலா 4 வார்டுகளிலும், ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர், திருவள்ளூர், தேனியில் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
பேரூராட்சிகளை எடுத்துக்கொண்டால், சேலத்தில் 15 வார்டுகளிலும், தர்மபுரி 11 வார்டுகளிலும், தஞ்சை, திருவண்ணாமலையில் தலா 6 இடங்களிலும், செங்கல்பட்டு, வேலூரில் தலா 5 இடங்களிலும், ஈரோடு, ராணிப்பேட்டையில் தலா 4 இடங்களிலும், கடலூரில் 3 இடங்களிலும், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், மயிலாடுதுறையில் தலா 2 இடங்களிலும், அரியலூர், விழுப்புரம், நாமக்கல்லில் தலா ஒரு வார்டையும் பாமக கைப்பற்றியது.
மங்கிய டார்ச் லைட்
மக்கள் நீதி மய்யம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சற்றும் சோபிக்கவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் வானதி சீனிவாசனுக்கு டஃப் ஃபைட் கொடுத்தார் கமல்ஹாசன். நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் எடுபடும் என்பதே இதுவரை அதன் மீதான பார்வையாக இருந்தது. ஆனால் இந்த முறை மநீம அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. இதற்கு ஆளும் கட்சி காட்டிய பிரம்மாண்டம் மிக முக்கியக் காரணம் எனக் கூறுகின்றனர் அக்கட்சியினர். தங்களால் வாக்குறுதிகளுடன் மட்டுமே மக்களை அணுக முடிந்த நிலையில் ஆளும், ஆண்ட கட்சிகள் அதிகாரம், பணபலத்துடன் அணுகின என்று அங்கலாய்த்துக் கொள்கின்றனர் அக்கட்சியினர்.
அரங்கேறக் காத்திருக்கும் அரசியல்
வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களைக் கொண்டு மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகர்மன்றங்களுக்கான தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள். இதில் தான் அத்தனை அரசியல் கூத்துகளும் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மாநகராட்சி தேர்தலில் மேயர், துணை மேயர் மறைமுகத் தேர்தலில் அமைச்சர்களுக்குள் போட்டாபோட்டி உருவாகும் எனக் கணிக்கப்படுகிறது. குறிப்பிட்டு உதாரணம் சொல்ல வேண்டுமானால், திருச்சி மாநகராட்சியை எடுத்துக் கொள்ளலாம். திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள். இதில் 46 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜகவும் கணிசமான வாக்குகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கை காட்டுபவரா அல்லது அமைச்சர் கே.என்.நேரு கைகாட்டுபவரா யார் மேயர் ஆவார்கள் என்ற போட்டாபோட்டி இப்போதே நிலவுகிறது.
இதையெல்லாம் மனதில் வைத்தே வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே திமுக தலைவர் ஸ்டாலின் “தேர்தல் முறை, மறைமுகமாக இருந்தாலும், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமையால் அறிவிக்கப்படுகிறவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, முழுமையான அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டியதும் தி.மு.க. நிர்வாகிகளின் கடமை. தோழமைக் கட்சிகளுக்கு கண்ணியமான அளவில் ஒதுக்கப்படும் பதவிகளுக்கும் கட்டுப்பாடான முறையில் ஆதரவளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டியதும் தி.மு.க.வினரின் பொறுப்பு. அதில் எள்முனையளவுகூட பாதிப்பு இருக்கக்கூடாது ” என்று வலியுறுத்தி தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார் என்று கூறப்படுகிறது.