தலங்கம ஈரநிலத்தின் குறுக்கே நான்கு வழிப்பாதையை கொண்ட அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மனு மீதான விசாரணை முடியும் வரை குறித்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலங்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (21) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை தலங்கம பகுதியைச் சேர்ந்த ஆர். எம். சுஹதரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த ரிட் மனுவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் தேசிய ஈரநிலக் கொள்கையின் பிரிவு 24 (04) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கப்பெறாத நிலையில் தலங்கம மருத நிலத்தின் குறுக்கே நான்கு வழி அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படுவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்.
தலங்கம சதுப்பு நிலத்தின் சுற்றுச்சூழலை சேதப்படுத்தும் நான்கு வழி அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவையும், அந்த முடிவை ரத்து செய்யும் ரிட் உத்தரவையும் மனுதாரர் கோரியிருந்தார்.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும், சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி சுரங்க விமலசேனவும் ஆஜராகியிருந்தனர்