உரும்பிராயில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்று முன்தினம் (20) இரவு திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உரும்பிராய் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் புகுந்த இருவர், கேரிஎம் மோட்டார் சைக்கிளின் மின் இணைப்பை துண்டித்து திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அது தொடர்பில் தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், சம்பவ இடத்திலிருந்த சிசிரிவி பதிவின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
உடுவிலைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் கோண்டாவிலில் உள்ள காணி ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகி உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற திருட்டு, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நிலையில் தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிஸார் கூறினர்.