கன்னியா வெந்நீரூற்று பகுதியில் சிவன் ஆலயத்திற்கு பூட்டு… தொல்லியல் திணைக்களம் அடாவடி… சைவ மக்களின் வழிபாட்டு உரிமை மறுப்பு- இப்படியாக மீண்டும் பரபரப்பு செய்திகள் இணையத்தளங்களில் தலைப்பு செய்திகளாகியுள்ளன.
சமூக வலைத்தளவாசிகளின் ‘விபி’யை எகிற வைக்கும் இந்த செய்திகளின் பின்னணியில் பெரும்பாலான மக்கள் அறிந்திருக்காத பல்வேறு மர்ம, அதிர்ச்சி முடிச்சுகள் உள்ளன. தமிழ்பக்க வாசகர்களிற்காக கன்னியா வெந்நீரூற்று சர்ச்சையை அடி முதல் நுனி வரை விலாவாரியாக தருகிறோம்.
தற்போது இணையத்தளங்களில் செய்தி வெளியானதை போல, கன்னியா சிவன் கோயில் இன்று நேற்று பூட்டப்படவில்லை. அது பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது.
கன்னியாவில் இப்பொழுது ஏற்பட்டுள்ள சிக்கலிற்கு பௌத்த – சைவ முரண்பாடு மட்டும் காரணமல்ல. தமிழர்களிற்கிடையிலான ஏட்டிக்குப் போட்டியும் ஒரு காரணமென்பது உங்களிற்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
கன்னியா வெந்நீரூற்று தமிழ் மக்களின் இதிகாச கதைகளுடனும், தொன்மையான வரலாற்றுடனும் பின்னிப்பிணைந்த இடம்.
கன்னியா பற்றிய இதிகாச கதை இராவண மன்னனுடன் தொடர்புடையது. அந்த வரலாறு எல்லோரும் அறிந்ததுதான்.
இதிகாச கதைகளுடன் பின்னிய கன்னியா, தொன்று தொட்டு பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் இடமாக விளங்கி வருகிறது. இலங்கையில் வடக்கே கீரிமலையும், கிழக்கே கன்னியாவும் பிதிர்க்கடன் நிறைவேற்றும் முக்கிய தலங்களாகும்.
நீண்ட தமிழ் வரலாற்றையுடைய கன்னியா தொடர்பில் போர்த்துக்கேயர் கால வரலாற்று ஆவணங்களே, தற்போதுள்ள ஆகப்பழமையான வரலாற்று ஆவணங்களாகும். 1798ஆம் ஆண்டில் ஜேம்ஸ் கார்டினர் எழுதிய புத்தகமொன்றில், சைவர்களின் வழிபாட்டிடமாக உள்ள அந்த இடத்தில் சிவலிங்கம், மணி, இராணவனின் தாயாரின் கல்லறை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். சைவர்கள் அங்கு அந்தியேட்டி கிரியை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் சிவன் வழிபாடு காணப்பட்ட கன்னியாவில் பின்னாளில் பிள்ளையார் ஆலயமொன்றே காணப்பட்டது.
கன்னியா முன்னர் மடங்களிற்கு புகழ்பெற்ற இடமாக இருந்தது. 50 வருடங்களின் முன்னர் வரை அங்கு பெரிய மடங்கள் காணப்பட்டு, ஆயிரக்கணக்கான அடியவர்கள் தங்கும் வசதியிருந்தது.
1960களின் தொடக்கத்திலிருந்த அந்த கோயிலில் பூசைகள் சீரின்றி போய், கோயில் பாழடைந்தது. எனினும், வெந்நீரூற்றை பிரதேசசபை பராமரித்து வந்தது. அருகேயிருந்த மடத்தில் திருநீறு, சந்தனம் வைக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் அந்த மடத்திற்கு சென்று வந்தனர்.
எனினும், கடந்த 50 வருடங்களில் முறையான பராமரிப்பின்றி அவை அழிவடைந்தன. அந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தமிழ் அடையாளங்கள் படிப்படியாக அங்கிருந்து அகலத் தொடங்கியது.
கடந்த 50 வருடங்களில் கன்னியாவில் முறைப்படியான சைவ வழிபாடுகள் நடக்காமல் விட்டதே இப்பொழுது சிக்கலாகியுள்ளது.
2000களில் பிள்ளையார் கோயிலை நிர்வாகம் இடித்து மீள கட்ட முயற்சித்த போது, பிக்குகளின் தலையீட்டால் இடிக்கப்பட்ட கோயிலை மீள கட்ட முடியாமல் போனது.
ஒரு கட்டத்தில் கன்னியா சுற்றுலா தலமாக அடையாம் மாறத் தொடங்கியது. தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் இல்லாமல் போனது.
2009 ஆண்டின் பின்னர் கன்னியாவில் எந்த சைவ வழிபாடுகளும் நடக்காமலிருந்த நிலையில், கன்னியாவை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் சிலர் இணைந்து வழிபாடுகளை மீள ஆரம்பிக்க முன்றனர். அரச காணியில் அமைக்கப்பட்டிருந்த மடத்தில் சிவன் வழிபாட்டை படிப்படியாக ஆரம்பித்தனர்.
தென்கையிலை ஆதீனம் ஆரம்பத்தில் வழிபாடுகளை செய்தது. எனினும் அப்போது வழிபாட்டிற்கு செல்லும், அந்தியேட்டிக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
இதையடுத்து சில அமைப்புக்கள் இணைந்து அங்கு பிரமாண்ட வழிபாடுகள், அந்தியேட்டிகளை மேற்கொண்டனர். சில தசாப்தங்களாக கன்னியாவிற்கு செல்ல அச்சப்பட்டு ஒதுங்கியிருந்த மக்கள் படிப்படியாக கன்னியாவிற்கு திரும்பி வரத் தொடங்கிய கதை இதுதான்.
2019இல் கன்னியா சிவன் கோயிலிற்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னர், அங்கு சைவ கோயில் இருந்தமைக்கோ, வழிபாடு நடந்தமைக்கோ, நில உரிமை இருந்தமைக்கோ எந்த ஆவண ரீதியிலான ஆதாரமும் இருக்கவில்லை.
கன்னியா சிவன் கோயில் நிர்வாகத்தின் மூலம் படிப்படியாக சைவ ஆலய ஆவணங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதேவேளை, நல்லாட்சி அரசின் காலத்தில் கன்னியாவிலிருந்த பழைய பிள்ளையார் கோயிலில் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரங்கள் உடைக்கப்பட்டன.
அருகிலுள்ள புதிய கோயிலில் வழிபட்டவர்கள் இதை அவதானித்து பகிரங்கப்படுத்தினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. அப்போதைய அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் கூட்டம் நடந்தது. பிரச்சனைக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.
இதேவேளை, இந்த அடாவடிக்கு எதிராக 2019 யூலை 16ஆம் திகதி கன்னியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கன்னியா வெந்நீரூற்று அண்மையாக இருந்த தனியார் காணியில் பிள்ளையார் கோயிலிருந்தது. அந்த காணிக்கான வழக்கிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகினார்.
இந்த வழக்கு இணக்கப்பாட்டுடன் முடிவடைந்தது. வெந்நீரூற்று பகுதியில் இருந்த தனியாருக்கு சொந்தமான 8 ஏக்கர் காணியில் எந்த மத கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாதென்றும், சற்று தொலைவில் தொல்பொருள் சின்னமில்லாத இடத்தில் 10 பேர்ச் காணியை வழங்கலாமென்றும், அதில் பிள்ளையார் கோயிலை கட்டலாமென்றும் இணக்கப்பாடு ஏற்பட்டது. அதாவது, நீரூற்றுக்கு அண்மையாக இப்போதைக்கு சைவ ஆலயங்கள் இருக்காது. வெளிப்பகுதியிலேயே அமையும்.
இதேவேளை 2020ஆம் ஆண்டு யூன் மாதம் சிவன் கோயில் நிர்வாகம் மீது, பிள்ளையார் கோயில் காணிச் சொந்தக்காரரான பெண் மணி, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். சிவன் கோயில் அறங்காவலர் அமைப்பு பதிவு செய்யப்படாதது, மக்களிடம் நிதி சேகரிக்கிறது என முறையிட்டார்.
இதையடுத்து, உப்புவெளி பொலிசார் சிவன் ஆலய வழிபாட்டிற்கு தடையேற்படுத்தினர். கன்னியாவில் தமிழ் சைவ வழிபாட்டு அடையாளங்களை அகற்ற வேண்டுமென கங்கணம் கட்டி செயற்பட்ட தரப்புக்களிற்கு, தமிழ் தரப்புக்களிற்குள்ளேயே ஏற்பட்ட முரண்பாடு வாய்ப்பாகி விட்டது என்பதுதான் உண்மை.
இதேவேளை, கன்னியாவில் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி 2019 யூலை 16ஆம் திகதி நடந்த பேரணி, இனமுரணை கூர்மைப்படுத்தி, சிவன் ஆலயத்தை நிரந்தரமாக அமைக்கும் தமது திட்டத்தை தோல்வியடைய வைத்து விட்டது என்ற அபிப்பிராயம் அந்த ஆலய நிர்வாகத்திடம் உள்ளது.
அந்த பேரணியை செய்தவர்கள் அதன் பின் களத்தில் இருக்கவில்லை. ஆர்ப்பாட்டத்தின் பின், வழிபாட்டு உரிமைக்காக எதையும் செய்யவில்லை.
மறுவளமாக, அந்த பேரணிக்கு பின்னர் பௌத்த தேரர்கள், தொல்லியல் திணைக்களத்தின் விசேட அவதானம் கன்னியாவில் குவிந்து, தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமை இப்போது முற்றாக இல்லாமல் போய்விட்டது என்பது ஆலய நிர்வாகத்தின் வருத்தம்.
எனினும், கன்னியா சிவன் ஆலய நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. பொலிஸ் உயரதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பினருடனும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
இதேவேளை. 2020, 2021 யூலையில் ஆடியமாவாசை வழிபாடுகளை ஆலய நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால், 2020ஆம் ஆண்டு ஆடியமாவாசை வழிபாட்டை மேற்கொண்டமைக்காக ஆலய நிர்வாகம் மீது பொலிசார் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்ததுடன், அந்த வழக்கு விசாரணையில், ஆலய வழிபாட்டிற்கு தடையில்லையென பொலிசார் தெரிவித்தனர். எனினும், அந்த வழக்கு விசாரணைக்கு சில நாட்களின் பின் இடம்பெற்ற சிவராத்திரி வழிபாட்டிற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
2021இல் நீதிமன்ற அனுமதியுடன் வழிபாடுகள் நடந்தன.
கடந்த ஜனவரியில் இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்தியது. இதன்போது, மக்களின் வழிபாட்டு உரிமைக்கு தடையில்லையென பொலிசார் எழுத்துமூல ஆவணம் வழங்கியுள்ளதாக சிவன் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கன்னியாவில் சைவர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட நிலைமை மாறி, மீளவும் வழிபாட்டு உரிமையை ஏற்படுத்தும் நிலைமை கனிந்துள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சமயத்திலேயே, கன்னியா சிவன் ஆலயத்திற்கு பூட்டு என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆலயம் பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்த போது யாருமே கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, ஆலய நிர்வாகத்தினர் தனித்து போராடி, மீள திறக்க வைக்கும் நிலைமையை உருவாக்கி வரும் போது, சர்ச்சையை கிளப்புவதன் பின்னணி அரசியல் என்ன என்ற கேள்வி எழுகிறது.