மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அரசு ஒருபோதும் கைவைக்காது. அதேபோல எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதனை கைகட்டி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
தலவாக்கலை, லோகி தோட்டத்தில் இன்று (19) நவீன வசதிகளுடன் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமூறு,
“சிறுவர் பராமரிப்பு நிலையமென்பது முன்னர் மடுவம்போலவே இருந்தது. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நவீன யுகத்துக்கேற்ப, நவீன வசதிகளுடன் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கு தற்போது 120 லட்சம் ரூபா ஒதுக்கப்படுகின்றது. 100 லட்சம் ரூபா செலவில் கட்டிடம் அமைக்கப்படுகின்றது. தேவையான உபகரணங்களை வாங்கவதற்கு எஞ்சிய 20 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. கடந்த வருடம் 15 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
எமக்கு தேவையாக இருந்தால் அந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவை வைத்து ஐந்து தோட்டங்களில், ஐந்து நிலையங்களை அமைக்கலாம். ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை. சகல வசதிகளையும் எமது பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில்தான் முழு தொகையும் செலவளிக்கப்படுகின்றது. அப்போதுதான் மாற்றம் வரும். இதில் நாம் அரசியல் செய்யவில்லை. மக்களுக்கான சேவையையே செய்கின்றோம். அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும், தற்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் காலத்திலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தியே காங்கிரஸ் செயற்பட்டுவருகின்றது.
கல்வியால்தான் எமது மலையக சமூகம் முன்னேற முடியும். தோட்டப்பகுதி என்பது எமது இருப்பிடமாக இருந்தாலும் தொழில் நிலை மேம்படவேண்டும். ஏனைய சமூகத்துக்கு நிகராக நாமும் வளரவேண்டும்.
அதேவேளை, எதிரணிலுள்ள அரசியல் பிரமுகர்கள் இன்று குறைகூறி மக்களை குழப்பும் விதத்திலான அரசியலையே நடத்துகின்றனர். நுவரெலியா மாவட்டத்திலும் அப்படிதான் நடக்கின்றது. பெருந்தோட்ட மக்களின் நலன்கருதியே மானிய நிலையில் கோதுமை மா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று இதனையும் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது மக்களுக்கு எதையும் செய்யவில்லை.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் கைவைக்கப்படும் எனக்கூறிக்கொண்டு தற்போது ஒருவர் இங்கு வந்துள்ளார். இவ்விரு நிதியங்களையும் கடந்த அரசே கொள்ளை அடித்தது. எமது அரசு மேற்படி நிதியங்களில் கைவைக்காது. மலையக மக்களுக்கு பிரச்சினை என்றால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகட்டி வேடிக்கை பார்க்காது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அன்று முதல் இன்றுவரை காங்கிரஸ் அவ்வாறுதான் செயற்பட்டுள்ளது. அரசில் இருந்து எமது மக்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்தையும் நாம் பெற்றுக்கொடுப்போம்.” என்றார்.
–க.கிஷாந்தன்-