கர்நாடகாவில் நெற்றியில் குங்குமம் இட்டிருந்த மாணவரை வகுப்பறையில் அனுமதிக்காமல் திருப்பிய அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், ‘‘மத ரீதியான அடையாளங்கள் உடை, ஆபரணங்களை அணியக் கூடாது” என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கர்நாடக கல்வித்துறை, ‘‘மத ரீதியான உடைகளைஅணிந்து வருவோரை வகுப்புக்குள் அனுமதிக்க கூடாது”என சுற்றறிக்கை அனுப்பியது.
இதையடுத்து ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதை கண்டித்து சிக்கமகளூரு, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் மாணவிகள் 3-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விஜயபுராவில் அரசு பி.யு.கல்லூரியில் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு வந்த மாணவரை கல்லூரி நிர்வாகம் வகுப்பறையில் நுழைய அனுமதி மறுத்துள்ளது.
இதனால் கோபமடைந்த அந்த மாணவர் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பஜ்ரங் தளம், ராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கல்லூரி வாயிலில் போராட்டம் நடத்தினர். வரும் 23ம் தேதிவரை கல்லூரிகளுக்கு அருகில்போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறுகையில், ‘‘குங் குமம் இடுவது மத நம்பிக்கை அல்ல. இந்திய கலாச்சாரத்தின் அடையாளம். மாணவரை வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுத்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும். குங்குமம், விபூதிஆகியவற்றை அணிந்து வரும்இந்து மாணவர்களை வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கும் வரை போராட்டம் தொடரும்”என்றார்.
தடைக்கு எதிராக விரிவுரையாளர் ராஜினாமா
கர்நாடகாவின் துமக்கூரு தனியார் கல்லூரியில் ஹிஜாப் அணிய பெண் விரிவுரையாளர் சாந்தினி என்பவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் தனது விரிவுரையாளர் பணியை ராஜினாமா செய்வதாக கல்லூரியின் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், நான் கடந்த 3 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வருகிறேன். தற்போது ஹிஜாபை அகற்றுமாறு கூறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனது மத நம்பிக்கைக்கு எதிரான கல்லூரியின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், எனது பணியை ராஜினாமா செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.