பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் ஆரவ் ஜோடியாக நடித்த நடிகை காவியா தாப்பார் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் நடித்த ’மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை காவியா தாப்பார். இவர் கடந்த வியாழக்கிழமை மும்பையில் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது காரில் ஆண் நண்பருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மது அருந்தியுள்ளார்.
இந்த நிலையில் அவர் பார்க்கிங் செய்யப்பட்ட கார் ஒன்றின் மோதியதாக கூறப்பட்ட புகாரில் அவரிடம் விசாரணை செய்ய பெண் கான்ஸ்டபிள் ஒருவர் விரைந்தார். ஆனால் அந்த பெண் கான்ஸ்டபிளிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்ட காவியா தாப்பார், அவரை பிடித்து கீழே தள்ளியுள்ளார்.
இதனையடுத்து நடிகை காவியா தாப்பார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து மும்பை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். விரைவில் அவரது தரப்பினர் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.