நெடுந்தீவில் தமது அறக்கட்டளைக்கு சொந்தமான காணியை பின்வழியால் அபகரித்து அறநெறி பாடசாலை அமைக்கப்பட்டுள்ளதாக நாகேந்திரர் செல்லம்மா அறக்கட்டளை குற்றம்சுமத்தியுள்ளது.
காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியவர்கள், அதிலிருந்து விலகி, சட்டபூர்வ உரிமையாளர்களான தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ் நெடுந்தீவு செல்லம்மா வித்தியாலய வளாகத்தில் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாகேந்திரர் செல்லம்மா ஞாபகார்த்த அறநெறி பாடசாலை மற்றும் நாகேந்திரர் செல்லம்மா ஞாபகார்த்த முன்பள்ளி ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 07ஆம் திகதி நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்திய சோதி, வேலன்சுவாமி, இந்துமகா சபையை சேர்ந்த சோ.பத்மநாதன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும், இந்த காணியின் சட்டபூர்வ உரிமையாளர்கள் தாமே என்றும், பின்வழியாக காணி கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாகேந்திரர் செல்லம்மா அறக்கட்டளை குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் நாகேந்திரர் செல்லம்மா அறக்கட்டளையினர் தகவல் தருகையில்,
நெடுந்தீவில் இலங்கையின் முதலாவது பெண் கிராமசபை தலைவரான நாகேந்திரர் செல்லம்மா நினைவாக அவரது குடும்பத்தினர் தமது காணியில், தமது செலவில் பாடசாலை கட்டி அரசாங்கத்திடம் கையளித்தனர் பின்னர் அப்பாடசாலை அருகிலுள்ள பிறிதொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டபோது செல்லம்மா வித்தியாலயம் அமைந்திருந்த காணியை, அதன் உரிமையாளரான நாகேந்திரர் செல்லம்மா குடும்பத்தினரிடமே அரசாங்கம் மீள ஒப்படைத்திருந்தது. நெடுந்தீவின் பெரிய பாடசாலையான மகாவித்தியாலத்தையும் இந்த குடும்பத்தினரே அமைத்தனர் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
அந்த காணியின் தற்போைதய உரிமையாளர்கள் நாகேந்திரர் செல்லம்மா குடும்பத்தினரும், நாகேந்திரர் செல்லம்மா அறக்கட்டளையினருமே.
அரசு மீளளித்த காணியில் தொழிற்பயிற்சி நிலையமொன்றை அமைக்கும் முயற்சியில் நாகேந்திரர் செல்லம்மா அறக்கட்டளையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கனடாவில் நிதி மற்றும் பொருள் திரட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலைமையில் நாகேந்திரர் செல்லம்மா அறக்கட்டளைக்கு சொந்தமான காணியை, பின்வழியால் கையகப்படுத்தி அங்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்துள்ளது.
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வேலன் சுவாமிகள் போன்றவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த காணியை கையகப்படுத்தியவர்களிற்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம் என தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் வேலன் சுவாமிகளின் கருத்தறிய தமிழ்பக்கம் முயன்றது. தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவர் பதிலளிக்கவில்லை.