40 வயது நபரொருவரைக் காதலித்த இரண்டு பெண்களும் ஒரே நாளில் தமதுயிரை மாய்த்துக்கொள்ள எடுத்த முயற்சியால், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் 60 வயதுடையவர் என்றும் மற்றைய பெண் 32 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 60 வயது பெண்ணின் கணவர், 15 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குறித்த பெண், 25 வயதுடைய இளைஞர் ஒருவருடன் உறவினைப் பேணி வந்துள்ளதுடன், தனது சொகுசு வீடு உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் அந்த இளைஞனின் பெயருக்கே எழுதியும் வைத்துள்ளார். இதனையடுத்து கடந்த 15 வருடங்களாக இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தனது கணவன் பிலியந்தலை பிரதேசத்திலேயே வேறு ஒரு பெண்ணுடன் இரகசியமாக வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளதுடன், அது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து தனது வீட்டுக்கு வந்த 60 வயது பெண் மனமுடைந்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதுடன், தன்னுடன் இதுவரை வாழ்ந்து வந்த நபர் 60 வயது பெண்ணுடனும் வாழ்ந்து வந்துள்ளதை அறிந்துக்கொண்ட 32 வயதான பெண்ணும் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில், காப்பாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.