எமது தலைவர் பொதுமக்களின் கனவு நனவாக வேண்டும் என்ற அடிப்படையில் முதலாவது சந்தர்ப்பமாக எங்களை நோக்கி திறக்கபட்ட கதவாகவே இந்த 13ஆவது திருத்தசட்டத்தை பார்த்தார் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டில் நீடித்துக் கொண்டிருந்த தமிழ் தலைவர்கள் திடீரென 13ஐ நோக்கி செல்ல காரணம் என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தலைவர்கள் 13ஐ நோக்கி சென்றார்கள் என்ற கருத்து முற்றிலும் தவறானது. குறிப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 13ஐ நோக்கி நகருக்கின்ற எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் துணைபோகவும் இல்லை. துணைபோகப்போவதும் இல்லை.
1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தன போது அதன் பின்னர் 13ஆவது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு வட-கிழக்கு இணைந்த மாகாண சபை அமைந்தது. அந்த வேளையில் அறவழியில் இருந்த தமிழ் தலைவர்கள் அதனை எதிர்த்தனர். ஆனால் எங்களுடைய பெருந்தலைவர் பத்மநாபா முதலாவது தடவையாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் வித்தாகிய தங்களை ஈகம் செய்த எத்தனையோ தோழர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்களின் கனவு நனவாக வேண்டும் என்ற அடிப்படையில் முதலாவது சந்தர்ப்பமாக எங்களை நோக்கி திறக்கபட்ட கதவாகவே இந்த 13ஆவது திருத்தசட்டத்தை பார்த்தார்.
இதில், நீங்கள் தெளிவாக ஒரு விடயத்தை விளங்கிகொள்ள வேண்டும். வேறு கட்சி தலைவர்கள் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டார்கள். பதவிகளை பெற்றார்கள். ஆனால் தோழர் நாபா எமது கட்சியில் உள்ள ஒரு தோழரைத் தான் முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்தார். அவர் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை. இது தான் வரலாறு. அதனை மீண்டும் பேச வேண்டிய அவசியம் இல்லை.
அப்போது, 13ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் மாகாண சபை உருவாக்கப்பட்டு நாங்கள் வெறும் 15 மாதங்கள் தான் இந்த மாகாண சபையை நிர்வகித்து இருக்கின்றோம். நாங்கள் அப்பொழுதே மிக தெளிவாக ஒற்றை ஆட்சிக்குள் உள்ள 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்குரிய தீர்வு அல்ல என்று கூறினோம். அப்போது, இந்த விடயத்தை முதலில் ஏற்று முன்னகர்த்துகின்ற போது படிப்படியாக பிராந்தியத்திற்கான சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி கட்டமைப்புடனான ஒரு தீர்வை வழங்குவதாக ராஜீவ்காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.
அடிப்படையில் எதுவுமே இல்லாத நிலையில் தான் நாங்கள் வட-கிழக்கு மாகாணசபையை கையில் எடுத்தோம். வெறுமனே 15 மாதங்களுக்குள் தலைநகராக திருகோணமலையை நிர்ணயித்து அங்கு வட-கிழக்கு மாகாண சபைக்கான கட்டடம் உட்பட அடிப்படைக் கட்டமைப்புக்களை உருவாக்கினோம். அது எங்களின் தலைமையினுடைய நிர்வாகத்திறனின் வெற்றி. அந்த அடிப்படையில் படிப்படியாக நாங்கள் முன்னகர்கின்ற போது இந்த 13ஆவது திருதத்தில் இருக்கின்ற குறைபாடுகள் பற்றி மிக தெளிவாக நாங்கள் புரிந்து கொண்டோம்.
நாம் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி படிப்படியாக நகர்ந்து சென்ற முயற்சி அப்போது முடக்கப்பட்டது. இருந்தாலும் குறிப்பாக பத்மநாபா பிரேமதாசாவிடம் அதேபோன்று ஜே.ஆரிடமும் மிகத் தெளிவாக 13க்கு மேலாக செல்லவேண்டிய விடயங்கள் குறித்தும் அதிகாரப்பகிர்வுக்கான விடயங்களில் என்ன செய்யவேண்டும், என்ன குறைபாடுகள் இருக்கின்றன உள்ளிட்ட சகல விடயங்களையும் அவர் எழுத்து மூலமாக வழங்கியிருந்தார்.
ஆகவே நாங்கள் அன்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற விடயமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் தற்பொழுது சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் கூட்டுமுயற்சியில் தமிழ்பேசும் கட்சிகள் சேர்ந்து 13ஐ வலியுறுத்தி அதை நடைமுறைப்படுத்த முயற்சிப்போம் என்ற முயற்சி எடுக்கப்பட்டது. இது 13இற்குள் எங்கள் மக்களின் அபிலாஷைகளை சுயநிர்ணயத்தை அதிகாரபகிர்வு விடயங்களை முடக்குவதற்கான நகர்வு அல்ல. இது ராஜபக்ஷ அரசாங்கத்தை அம்பலப்படுத்துவதற்கான நகர்வு எனத் தெரிவித்தார்.



