26 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இலங்கை

விடுதலைப் புலிகள் தனியரசுக்கான போராட்டத்தையே முன்னெடுத்தார்கள்; கஜேந்திரன் எம்.பி

தமிழீழ விடுதலைப் புலிகள் தனியரசுக்கான போராட்டத்தையே முன்னெடுத்தார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (13) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தொலைகாட்சி ஒன்றில் இடம்பெற்ற விவாதத்தில் என்னுடன் பங்குகொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பைச் சேர்ந்த சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் தனிநாட்டிற்காக போராடி அவர்கள் எதனையும் சாதித்திருக்கவில்லை என்றும், தமிழர்கள் தேர்தல்களில் ஆணை வழங்கிய, தமிழ் மக்களது இருப்பிற்கு குறைந்தபட்ச பாதுகாப்பினையாவது வழங்கக்கூடிய தேசம் அங்கீகரிக்கப்பட்ட, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நாம் (TNPF) வலியுறுத்தும் சமஸ்டிக்கும் வழிவரைபடம் இல்லை என்றும் கூறி மக்கள் மனதில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி, இருப்பதையாவது தக்க வைக்க வேண்டும் என்ற போர்வையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆறுகட்சிகள் கூட்டாக கோரும் துரோக நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு முயன்றிருந்தார்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தை மேசையில், ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமானதும் சாத்தியமானதுமான தீர்வை பரிசீலிப்பதற்கு தயாராகவே இருந்தார்கள் என்ற உண்மையை பதிவு செய்யவேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு ஏற்பட்டது.

அந்த வகையில் விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்காக போராடி வந்த நிலையில் அரசுடன் நேரடியாக இடம்பெற்ற பேச்சுக்களிலும் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்ற பேச்சுக்களின்போதும் தமிழ்த் தேசத்தின் இருப்பினை பாதுகாக்கக்கூடிய தீர்வை அரசுத்தரப்பு முன்வைத்தால் பரிசீலிக்கத் தாயராக இருந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்த முற்பட்ட வேளையில், நான் கூறிய கருத்துக்களானது, விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்காக போராடவில்லை என தவறாக அர்த்தப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. தெளிவற்ற வகையில் அக்கருத்து வெளிவந்தமைக்காக நான் மனம் வருந்துகின்றேன். அதன் காரணமாக மனவேதனைக்கும், மனவுளைச்சலுக்கும் உள்ளான தமிழ்த் தேசிய பற்றாளர்களிடம் நான் மன்னிப்புக்கோருகின்றேன்.

1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் சனநாயக வழியில் முன்வைத்த உரிமைக் கோரிக்கைகளை சிறீலங்கா அரசு நிராகரித்தமை மட்டுமன்றி தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை தீவிரப்படுத்தியதன் விளைவாக தமிழீழ தனியரசை உருவாக்கும் போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிவரை உறுதியாக முன்னெடுத்து வந்தார்கள்.

விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்காக போராடி வந்த நிலையில் அரசுடன் நேரடியாக இடம்பெற்ற பேச்சுக்களிலும் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்ற பேச்சுக்களின்போதும் தமிழ்த் தேசத்தின் இருப்பினை பாதுகாக்கக்கூடிய தீர்வை அரசுத்தரப்பு முன்வைத்தால் பரிசீலிக்கத் தயார் என்பதனை வெளிப்படுத்தி இதயசுத்தியுடன் செயற்பட்டு வந்தார்கள்.

அதன் ஒரு கட்டமாகவே இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபு முன்வைக்கப்பட்டது. அவ்வாறு விடுதலைப் புலிகள் தயாராக இருந்தபோதும் சிறீலங்கா அரசு எந்தவொரு தீர்வையும் வழங்கத் தயாரில்லாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரிவினையை தவிர வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்ற விசமத்தனமான பிரசாரத்தினை சர்வதேச அளவில் முன்னெடுத்தது.

அவ்வாறு அரசு பொய்ப் பிரசாரத்தினை முன்னெடுத்தபோது, அரசின் சதிகளையும், சூழ்ச்சிகளையும் மூடிமறைத்து, அனைத்துப் பழியையும் நேர்மையுடனும் அற்பணிப்புடனும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அரசு சுமத்துவதற்கு இன்று 13ஆம் திருத்தத்தை கூட்டாக வலியுறுத்தும் தரப்புப்பிலுள்ளவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

அதனை வாய்ப்பாக பயன்படுத்தி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடைமுறைச் சாத்தியமான தீர்வைக் காண்பதற்கு விடுதலைப் புலிகள் இடையூறாக உள்ளார்கள் என்று கூறி ஸ்ரீலங்கா அரசு எமது மக்கள் மீது இனவழிப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்கு சர்வதேச சமூகம் பூரண ஆதரவு வழங்கியது.

அதன் விளைவு எமது மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், எமது உரிமைக்கான நீதிக்கான விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டமும் மௌனிக்கப்படவே வழிவகுத்தது. போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இன்று வரை, அரசு தமிழ் மக்களுக்கு எதனையும் தருவதற்குத் தயாரில்லாதபோதும், இத் தரப்பினர் புலிகள் தனிநாட்டைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லாமையினாலேயே அழிக்கப்பட்டார்கள் என்றும் இருப்பதனையும் தவறவிடக்கூடாதென்றும் கூறி மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளும் நடவடிக்கையில் கடந்த 13 ஆண்டுகளாக ஈடுபட்டுவந்திருந்தார்கள்.

தற்போது, ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் மிகப் பலமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலேயே எதனையும் அடைய முடியவில்லை என்றும், முடிந்தவரை அவர்கள் போராடி விட்டார்கள் என்றும் கூறி முதலைக் கண்ணீர்விட்டவாறு இருப்பதனையும் விட்டுவிட்டு என்ன செய்வது அதனால் 13ஆம் திருத்தத்தையாவது இறுக்கிப்பிடித்திருக்க வேண்டுமென்று கூறி மக்களை ஏமாற்றி தமிழ் அரசியலை 13ற்குள் முடக்கி தமிழர்களது உரிமைப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளிவைக்க சதி செய்கின்றார்கள் என்பதனை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றொரு பெரும் மோசடி: அனுர அரசு அம்பலப்படுத்தியது!

Pagetamil

இலங்கையில் இந்தியாவுக்கான சந்தை

east tamil

யாழில் எலிக்காய்ச்சலால் 110 பேர் பாதிப்பு!

Pagetamil

நகைச்சுவையாளர்களால் நிரம்பிய இலங்கை நாடாளுமன்றம் – முன்னாள் ஆளுநர்

east tamil

Leave a Comment