பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், இந்த புதிய திருத்தச் சட்டத்தின் மூலம் ஒருவரைத் தடுத்து வைக்கும் காலம் 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைக்கப்படும்.
இதற்கிடையில், புதிய திருத்தங்கள் சட்டத்தின் கீழ் கைதிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக தடுப்புக்காவல் நிலையங்களுக்குச் செல்ல நீதிவானை அனுமதிக்கும்.
புதிய திருத்தச் சட்டம் ஒரு சட்டத்தரணி தடுப்பு மையத்திற்குச் செல்வதற்கும், கைதிகள் தங்கள் உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் வாய்ப்பளிக்கிறது.
சந்தேகநபர்கள் சித்திரவதைக்கு உள்ளாகவில்லையென்பதை உறுதிப்படுத்துவதற்கு சாசனத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்துவதற்கான வாய்ப்பையும் புதிய திருத்தம் வழங்குகிறது.
இதேவேளை, தொழிலாளர் இழப்பீட்டுத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தின் சமீபத்திய ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.