ஜெர்மனியில் மதுபோதையில் வாகனம் செலத்திய ஒருவர், 30 கார்களை இடித்துத் தள்ளி, வீட்டு சுவர்களையும் சேதமாக்கி, ஒரு வீடு தீப்பிடிக்கவும் காரணமானார்.
சம்பவத்தில் அவருக்கும் மேலும் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
பவேரியாவில் உள்ள நியூரம்பெர்க்கிற்கு மேற்கே உள்ள ஃபுர்த்தில் இந்த சம்பவம் நடந்தது.
50 வயதுடைய சாரதி மதுபோதையில் லொறியை செலுத்திச் சென்றார். சந்தியொன்றிலிருந்த ஒளிச்சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரிந்த போதும், அதை மீறிச் சென்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்களை இடித்துத் தள்ளினார்.
சிவப்பு சமிக்ஞையை மீறிச் சென்று முதலில் ஒரு காரை இடித்ததாகக் கூறப்பட்டது. அதில் காரிலிருந்த பெண் காயமடைந்தார்.
முதல் விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் நிதானமின்றி லொறியை செலுத்திச் சென்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்களை இடித்தார்.
அதில் கார்கள் அங்குமிங்கும் சிதறிச் சென்றதாகவும், சில கார்கள் அருகிலுள்ள வீடுகளின் சுவர்களில் மோதிச் சேதப்படுத்தின.
லொறியும் கார்களும் மோசமாக மோதிக்கொண்டு பின் ஒரு வீட்டை இடித்ததில் அதன் முகப்பு தீப்பிடித்தது.
உள்ளூர் தீயணைப்பாளர்கள் விரைந்து தீயை அணைத்தனர்; குடியிருந்தவர்களை வெளியேற்றினர்.
இதில் இருவர் காயமடைந்தனர்.
சம்பவத்தின் சேத மதிப்பு “மிக அதிகம்” என்று பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய 50 வயதான சாரதி, துருக்கியைச் சேர்ந்தவர். அவருக்கு ஜெர்மனியில் நிரந்தரமாகத் தங்க அனுமதி இல்லை என்பது தெரியவந்தது.
அவர் இப்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.