மன்னார் வங்காலை பஸ்திபுரி பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மந்திரவாதி உள்ளடங்களாக 06 பேர் இன்று புதன்கிழமை (09) மாலை வங்காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, புதையல் தோண்ட பயன்படுத்தும் ஒரு தொகுதி உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
வங்காலை – நானாட்டான் பிரதான வீதி, பஸ்திபுரி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு பின் பகுதியில் சிலர் புதையல் தோண்டுவதாக வங்காலை பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று புதன்கிழமை (9) மாலை அப்பகுதிக்கு சென்ற வங்காலை பொலிஸார் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 நபர்களை கைது செய்துள்ளனர்.
இவர்களில் கண்டியைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய மந்திரவாதி ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
ஏனைய நான்கு நபர்கள் வாங்காலையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் ஆசிரியர் எனவும் தெரியவருகின்றது.
மேலும் புதையல் தோண்ட பயன்படுத்தும் ஒரு தொகுதி உபகரணங்கள் மற்றும் மந்திரம் மேற்கொள்ள பயன்படுத்தும் ஒரு தொகுதி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் தற்போது வங்காலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.