பணி முடித்து விட்டு வீடு திரும்பிய பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பெற்றோல் ஊற்றி எரித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பெண் பொலிஸ் உத்தியோகத்தரும், கணவரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோனாபினுவல பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் (5) இந்த சம்பவம் நடந்தது.
இந்த பெண் கான்ஸ்டபிளின் கணவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் (05) மாலை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி முடிந்து வீடு திரும்பிய போது, தம்பதியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் தலையில் ஹெல்மெட்டினால் தாக்கி, பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார். இதன்போது கணவரம் தீக்காயமடைந்தார்.
சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு வந்து, இருவரையும் மீட்டு, நோயாளர் காவு வண்டியின் மூலம் பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தரை சேவையிலிருந்து விலகுமாறு கணவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததும், இதனால் இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவதும் தெரிய வந்துள்ளது.
கணவரின் நிலை மோசமாக இல்லையென்றும், மனைவியின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.