யாழ் மாவட்ட செயலகம், ஆளுனர் அலுவலகம், இந்திய துணைத் தூதரக இல்லம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி மீனவர் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
மீனவர்களை அகற்றி நிலைமையை வழமைக்கு கொண்டுவர பொலிசார் மேற்கொள்ளும் முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை. கடற்றொழில் அமைச்சர், வடக்கு ஆளுனர், நீரியல்வள திணைக்களம், கடற்படையினர் நேரில் வந்து உத்தரவாதம் தராத பட்சத்தில், போராட்டத்தை முடித்துக் கொள்ள மாட்டோம் என மீனவர்கள் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணி தொடக்கம் இந்த முடக்கல் போராட்டம் நடந்து வருகிறது.
சில நாட்களின் முன்னர் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் சடலமாக கரையொதுங்கினர். இந்திய ரோலர் படகு மோதியே அவர்கள் உயிரிழந்ததாக மீனவர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக யாழ்ப்பாண கரையோரங்களில் நடந்த போராட்டம், இன்று 4வது நாளில் நகரத்திற்கு வந்துள்ளது.
மாவட்ட செயலகம், ஆளுனர் அலுவலகம், இந்தி தூதர் இல்லத்திற்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட செயலகம், ஆளுனர் அலுவலக உத்தியோகத்தர்களும் அனுமதிக்கப்படவில்லை.
ஏ9 வீதி முடக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் தலையிட்டு, மாற்று பாதைகளில் போக்குவரத்தை ஒழுங்கமைத்து வருகின்றனர்.