யாழ்ப்பாணத்தில் நடக்கும் மீனவர் போராட்டத்தில் அரசியல் தலையீடுகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனால் மீனவர் சங்கங்களிற்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளது. தொழிலுக்கு செல்லக்கூடாதென ஒரு தரப்பு அறிவித்துள்ள நிலையில், இன்னொரு தரப்பினர் போராட்டத்தை கைவிட்டு நாளை முதல் தொழிலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக் கோரி இன்று 4வது நாளாக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது.
பருத்தித்துறை சுப்பர்மடத்தில் வீதியை குறுக்கறுத்து பந்தல் அமைக்கப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது. இதேவேளை, யாழ் மாவட்ட செயலகம், ஆளுனர் அலுவலகம், இந்திய இல்லம், ஏ9 வீதியை முடக்கி இன்று போராட்டம் இடம்பெற்றது.
வடக்கு ஆளுனர், கடற்றொழில் அமைச்சர், கடற்றொழில் நீரியல் வள திணைக்களம், கடற்படை அதிகாரிகள் வந்து உத்தரவாதமளித்தால் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டக்களத்திற்கு சென்றார்.
அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்வதாக அவர் வாக்குறுதியளித்தார். அதை ஒரு பகுதி மீனவர்கள் ஏற்றுக்கொண்டனர். இன்னொரு பகுதியினர், எழுத்துமூலம் உத்தரவாதமளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
‘எழுத்துமூல உத்தரவாதமளிக்க தயார், ஆனால் இதில் எழுத்துமூல உத்தரவாதமல்ல, உண்மையான நடவடிக்கையே அவசியம். எழுத்துமூலம் உத்தரவாதமளித்து விட்டு, அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் என்ன பலன்? நான் சொல்வதை நம்புங்கள். இந்திய படகுகளை கட்டுப்படுத்துவேன்’ என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.
எனினும், ஒரு பகுதியினர் தொடர்ந்து குழப்பத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் கட்சியொன்றின் பின்னணியில் இயங்கும் ஒரு பகுதி மீனவர்களே, சமரசம் ஏற்படாமல் குழப்பத்தில் ஈடுபடுவதாக ஏனைய மீனவர் சங்கங்கள் குற்றம்சுமத்தினார்கள்.
‘இந்திய மீனவர்களை உடனடியாக இந்த பருவகாலத்தில் கட்டுப்படுத்துவதே இப்போதைய தேவை. நிரந்தர தீர்வு உடனடியாக ஏற்படும் சாத்தியமில்லை. இப்பொழுது எதிரணியிலுள்ள தமிழ் தரப்புக்களும் கடந்த முறை அதகாரத்தில் இருந்தார்கள். இப்பொழுது மறு தரப்பு அதிகாரத்தில் உள்ளது. இரண்டு தரப்பாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போதைய அழுத்தங்களுடன், இந்த பருவத்தில் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தினால், அதற்கடுத்த சில மாதங்களில் அவர்களின் அத்துமீறல் இருக்காது. நிரந்தர தீர்வு என பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், அமைச்சருடனும் முரண்பட்டு அனுப்பி விட்டார்கள். இனி அவர்களிற்கு யார் தீர்வை கொடுப்பார்கள். நீண்டகாலத்திற்கு இப்படியே மீனவர்களால் போராட முடியாது. அடுத்த சில நாட்களிற்குள் தீர்வை பெற முடியாவிட்டால், தோல்வியுடன் போராட்டத்தை முடிக்க வேண்டும். அல்லது சுழற்சிமுறை என போராட வேண்டும். அதனால் என்ன பலன் கிடைக்கும்?’ என தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மீனவர் சங்க பிரதிநிதியொருவர் தமிழ்பக்கத்துடன் பேசும்போது கேள்வியெழுப்பினார்.
பிறிதொரு மீனவர் பிரதிநிதி, இலங்கை தமிழ் அரசு கட்சியின் சுமந்திரன் தரப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுமே தீர்வை ஏற்படுத்த விடாமல் குழப்பத்தில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தினார்.
யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைச்சர் டக்ளஸ் சந்தித்த போது, ஒரு தரப்பினர் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை அமைதிப்படுத்த முயன்ற போதும், அவர்கள் அடங்கவில்லையென்றும், அமைச்சர் டக்ளசின் முயற்சிகளை குழப்பவே தாம் போராட்டத்திற்கு வந்ததாக, அந்த குழுவினர் தம்மிடம் பகிரங்கமாக தெரிவித்ததாகவும், அந்த மீனவர் சங்க பிரதிநிதி தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
மீனவர் பிரதிநிதிகளின் இந்த கருத்துக்கள் தொடர்பில், அமைச்சர் டக்ளசின் வாக்குறுதியை ஏற்க மறுத்தவர்களின் கருத்தை பெற தமிழ்பக்கம் முயற்சித்த போதும், இதுவரை அது வெற்றியளிக்கவில்லை.
அவர்களின் கருத்துக்கள் கிடைக்கும் பட்சத்தில் அதனையும் வெளியிடுவோம்.