அண்மையில் மாகாண நிர்வாகத்தின் கீழ் இருந்து தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்ட அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்டு வேறு திணைக்களங்களுக்கும், வேறு மாவட்டங்களுக்கும் நிரந்தர நியமனம் பெற்ற பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவர்கள் பட்டதாரி பயிலுனர்களாக கடமை புரிந்த அதே பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுனர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் புதன்கிழமை (02) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹாம்பத்தை மட்டக்களப்பில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் சந்தித்து மேற்படி கோரிக்கையினை முன்வைத்ததை தொடர்ந்து ஆளுனர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக இடமாற்ற உத்தரவினை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இணை சந்தித்து மேற்படி விடயமாக எடுத்துரைத்ததைத் தொடர்ந்து சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உடனடியாக அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.