ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி ஆகிய வீரர்களுக்கும் மேலும் 3 அணியின் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் ரி20 தொடர் நடைபெறவுள்ள நிலையில் 4 வீரர்களுக்கு தொற்று உறுதியானதால் மாயங் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வரும் 6 ஆம் திகதி அகமதாபாத்தில் நரேந்தி மோடி மைதானத்தில் போட்டிகள் தொடங்குகின்றன.
இந்நிலையில் தான் ஓப்பனர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், பயிற்சி பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்களும், ஊழியர்களும் முழுமையாக குணம் பெறும் வரை தனிமையில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 31 ஆம் திகதி வீரர்கள் அனைவரும் அகமதாபாத் வந்தடைந்தனர். அனைத்து வீரர்களுக்கும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஷிகர் தவான், நவ்தீப் சைனி, ஃபீல்ட் கோச் டி.திலீப், பாதுகாப்பு தொடர்பு அதிகாரி பி.லோகேஷ் ஆகியோருக்கு திங்கள்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது. ருதுராஜ் கைக்வாடுக்கு செவ்வாய்க்கிழமையும், ஸ்ரேயாஸ் ஐயர், மசாஜ் தெரப்பிஸ்ட் ராஜீவ் குமாருக்கு நேற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைவருக்குமே பொசிடிவ் முடிவு வெளியாகியுள்ளது.
இன்னும் 3 நாட்களில் போட்டிகள் தொடங்கும் நிலையில் முன்னணி வீரர்களிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.