சுதா கொங்கரா இயக்கவுள்ள ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, பாலா இயக்கத்தில் ஒரு படம் ஆகிய படங்களில் சூர்யா கவனம் செலுத்தவுள்ளார்.
இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதனை சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். வெற்றிமாறன், பாலா படங்களுக்குப் பிறகு இப்படத்துக்கான தேதிகளை சூர்யா ஒதுக்கவுள்ளதாக தெரிகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட பிராந்திய மொழிப் படமாகவும் சாதனை படைத்தது. மேலும் 78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்தியப் படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது.