மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவு தூபியில் இன்று (30) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், வர்த்தக சங்க பிரிதிநிதிகள் உட்பட சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.எல்.முஹம்மது மீராஸாஹிப் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அத்தோடு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஹரி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.எல்.முஹம்மது மீராஸாஹிப் அவர்களின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணப் பொதிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது தற்போதைய கொவிட் சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறைந்தளவிலானோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-கல்லடி நிருபர்-