அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான அனைத்து நபர்களுக்கும் தனது தலைமையிலான அரசாங்கம் நீதி வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு முதல் அரசியல் பழிவாங்கலுக்கு முகம் கொடுத்த அனைத்து நபர்களுக்கும் நீதி வழங்கப்படும் என நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
தனது தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நள்ளிரவில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட மாட்டாது எனவும் விற்பனை செய்யப்பட்ட நாட்டின் சொத்துக்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
பொதுமக்களிடையே பல்வேறு கருத்துக்களை பரப்புவதற்கு சில குழுக்களைப் பயன்படுத்த சதி நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ஐக்கிய மக்கள் சக்திக்கு நிவாரணம் மற்றும் நலன்களை வழங்க மட்டுமே தெரியும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளின் மூலம் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாது என்றும் அப்படியான குழுக்கள் பிரச்சாரம் செய்வதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாட்டில் இருந்து திருடிய மற்றும் அரச வளங்களை தவறாக பயன்படுத்திய தலைவர்கள் பற்றி இந்தக் குழுக்கள் பேசுவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மௌனமாக இருக்கும் பெரும்பான்மையான மக்களும், உழைக்கும் சமூகமும் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.