வவுனியாவில் வரவேற்பு நடனமாடுவதற்கு அழைத்து வரப்பட்ட இரு சிறுமிகளின் நடனத்தை அரங்கேற்ற முன்னர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுமக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் சிறுமிகளைக் கொண்ட கலையம்ச அரங்கேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிந்திருக்க வில்லை என எதிர்கட்சி தலைவரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இது குறித்து ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இந் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல சமூக நலத் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு அங்கமாக வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற அரசியல் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் சிறுமிகளைக் கொண்ட கலையம்ச அரங்கேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை எதிர்கட்சிதர் தலைவர் அறிந்திருக்கவில்லை. குறித்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்களும், பிரதான ஏற்பாட்டாளர்களும் ஏலவே குறிப்பிட்ட கலையம்ச அரங்கேற்றம் குறித்து எதிர்கட்சி தலைவர் நிகழ்விற்கு முன்னதாகவோ அல்லது நிகழ்வின் போதேனும் அறிந்திருக்கவில்லை.
மேற்படி கலையம்ச நடன அரங்கேற்றம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கபடவில்லை. மேற்படி நிகழ்வுகள் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவையல்ல. அத்தோடு மாவட்ட மற்றும் தொகுதி மட்ட அமைப்பாளர்களாலேயே ஏற்பாடு செய்யப்பட்டது.
எதிர்கட்சித் தலைவர் குறித்த சம்பவத்தை அறிந்ததும், சகல ஒருங்கிணைப்பாளர்களுக்கும், வவுனியா மாவட்ட மற்றும் தொகுதி மட்ட அமைப்பாளர்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவ்வாறு கலையம்ச அரங்கம் இடம்பெறுவதாக ஏற்கனவே அறிந்திருந்தால் அதனை வரவேற்பதோடு குறித்த சிறுமிகளை பாராட்டியும் அவர்களுக்குரிய கௌரவத்தையும் எதிர்கட்சித் தலைவர் வழங்கியிருப்பார். எனவே இது எதிர்கட்சி தலைவருக்கு முற்றாக அறிவிக்கப்படாத ஒரு விடயமாகும்.
மனிதாபிமானமிக்க மக்கள்சார் எதிர்கட்சி தலைவர் என்பதும், எதிர்கட்சியில் இருந்த போதிலும் குறுகிய காலத்தில் பல்வேறு மனிதாபிமான செயற்பாடுகளில் பாகுபாடற்ற விதமாக செயற்பட்டு வருகின்றார் எனவும் எதிர்க்கட்சி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.