2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவர் தமிழில் குற்றப்பத்திரிகையை கோரிய அதேவேளை, ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகையை கோரிய மற்றுமொரு நபருக்கு இதுவரை குற்றப்பத்திரிகை கிடைக்காததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கை மார்ச் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 25 சந்தேகநபர்கள் மீது சட்டமா அதிபர் கடந்த வருடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், கொழும்பில் உள்ள மூன்று முன்னணி ஹோட்டல்கள் மற்றும் தெஹிவளையில் உள்ள Tropical Inn ஆகிய இடங்கள் மீதான குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மீது சதி செய்தல், திட்டமிடல், உதவி செய்தல், வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை சேகரித்தல், கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.