யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்.
யாழ் வணிகர் கழகத்தில் நேற்று (8) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திற்கு பின்னர் நாட்டில் படிப்படியாக சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்தந்த நிறுவனங்கள் விநியோகத்தை மட்டுப்படுத்தியதன் காரணமாக பால் மா, எரிவாயு சிலிண்டர், கோதுமை மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புகள் காரணமாக மீளப்பெறப்பட்டு அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 60 – 70 வீதமான கோதுமை மா விநியோகம் தற்போது சீராகி வருகிறது. பாண் மற்றும் பணிசுக்கு மாத்திரம் போதுமான அளவிற்கு கோதுமை மா வெதுப்பகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. பால்மா விநியோகமும் இந்த மாத இறுதியில் சீரடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நெல்லின் விலை அதிகரித்ததால் உள்ளூர் நாட்டரிசி 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசி 130 – 140 ரூபாய் வரையும் கீரிசம்பா 190 – 200 ரூபாய் வரை விற்கப்படுகின்றது.
உள்ளூர் அரிசிகளின் விலை தைப்பூசத்திற்கு பின்னர் சற்று குறைவடையும் சாத்தியக்கூறுகள் உள்ளது. 15 – 20 ரூபாய் வரை இந்த விலை இறக்கம் ஏற்படலாம். ஆனால் நெல் உற்பத்தியில் உரத் தட்டுப்பாடு மழையின்மை போன்றவற்றால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது.
நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்ற நேரத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. உளுந்து, பயறு, எள்ளு மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்ச்செய்கைகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். அரசாங்கம் உழுந்தை தடை செய்துள்ள நிலையில் எல்லோரும் உழுந்தை அதிகளவில் உற்பத்தி செய்ததால் விலை வெகுவாக குறைந்துள்ளது.
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என்றார்.