வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் அனைவரும் வீட்டில் 7 நாட்கள் கண்டிப்பாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விதிமுறை வரும் 11ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசின் புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வரை ஆயிரக்கணக்கில் இருந்த பாதிப்பு, இந்த வாரம் இலட்சக்கணக்கில் அதிகரித்துவிட்டது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கெனவே விதித்த நிலையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு வரும் 11ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டல் நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
”வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர் அனைவரும் குடிமக்களுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிந்து அதில் நெகட்டிவ் வந்தபின் வீட்டுக்குச் சென்று 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
8வது நாளில் அந்த நபர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து, அந்த முடிவை, மத்திய அரசின் ஏர்-சுவிதா தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாநில அரசுகளும் இந்த முடிவைக் கண்காணிப்பது அவசியம்.
ஒருவேளை 8-வது நாளில் பிசிஆர் பரிசோதனை முடிவு நெகட்டிவ் அதாவது கரோனா இல்லை எனத் தெரியவந்தால், அடுத்த 7 நாட்களுக்கு தனது உடல்நிலையை அவர்கள் கண்காணிக்க வேண்டும்.
அவ்வாறு கண்காணிக்கும் போது, ஏதாவது அறிகுறி உருவானாலோ அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். அந்த முடிவு வரும்வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அருகே இருக்கும் சுகாதார மையம் அல்லது தேசிய உதவி எண்ணுக்கோ அல்லது மாநில உதவி எண்ணுக்கோ அழைத்து தகவலைத் தெரிவிக்க வேண்டும்”.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மத்திய அரசு அறிவித்திருந்த எச்சரிக்கை பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் மட்டும் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எச்சரிக்கை பட்டியலில் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து அதில் முடிவு வரும் வரை விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும். அதன்பின் வெளியே செல்ல முடியும் அல்லது இணைப்பு விமானத்தில் பயணிக்க முடியும்.
மத்திய அரசின் எச்சரிக்கை பட்டியலில் தென்னாபிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரிஷியஸ், நியூஸிலாந்து, ஜிம்பாப்வே, தான்சானியா, ஹாங்காங், இஸ்ரேல், காங்கோ, எத்தியோப்பியா, கஜகஸ்தான், கென்யா, நைஜிரியா, துனிசியா, ஜாமியா ஆகிய நாடுகள் உள்ளன.