உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் சிகையலங்காரம், அழகு நிலையம் நடத்தி வருபவர் பிரபல சிகை அலங்கார நிபுணர் ஜாவித் ஹபீப். இவரது கடைக்கு அண்மையில் பூஜா குப்தா என்ற பெண் சிகை அலங்காரம் செய்யச் சென்றார். அப்போது பூஜா குப்தாவின் கூந்தலில் தெளிக்க தண்ணீர் இல்லாததால் தனது வாயில் இருந்து எச்சிலை உமிழ்ந்தார். இதை கடையில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது.
இந்த வீடியோவை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா உ.பி. போலீஸ் டிஜிபிக்கு அனுப்பி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஹபீப் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து முசாபர் நகர் போலீஸார், ஜாவித் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சிகை அலங்காரம் செய்ய சென்ற பூஜா குப்தா தனது அனுபவங்களை விளக்கும் மற்றொரு வீடியோவும் இணையதளத்தில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் பூஜா குப்தா கூறியதாவது:
ஜாவித் ஹபீப் எனக்கு சிகை அலங்காரம் செய்தார். அப்போது தண்ணீர் இல்லை என்பதால் எனது தலையில் எச்சிலை உமிழ்ந்தார்.
இனிமேல் நான் தெருவோரம் கடை வைத்து இருப்பவர்களிடம் சென்று முடிதிருத்தம் செய்து கொள்வேன். ஜாவித் ஹபீப்பிடம் செல்லமாட்டேன். ஜாவித் ஹபீப்பிடம், பல்வேறு முடிதிருத்தம் தொடர்பான பயிற்சிக்குச் சென்றேன். என்னை உட்கார வைத்து அவர் பல்வேறு பயிற்சிகளை அளித்தார். எனது தலையைத் திருப்பினார். அப்போது எனக்கு கழுத்து வலி உள்ளிட்ட பிரச்சினை இருப்பதாகக் கூறினேன். அப்போது எனது தலையில் 2 தட்டு தட்டி தலையில் உமிழ்ந்தார். இவ்வாறு அவர் வீடியோவில் கூறியுள்ளார். பூஜா குப்தாவும் அழகு நிலையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் ஜாவித் ஹபீப் மன்னிப்புக் கோரி வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “நான் அவரது தலையில் எச்சில் உமிழ்ந்தது நகைச்சுவைக்காகத்தான். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த விஷயத்தில் நான் என்ன சொல்வது? நான் செய்த இந்த விஷயத்தால் நீங்கள் நிஜமாகவே புண்பட்டிருந்தால், அதற்காக எனது இதயத்தின் அடியிலிருந்து மன்னிப்புக் கேட்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என்றார்.