நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக, நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 400 ஊழியர்களுக்கு கொரோனா இருந்தது தெரியவந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா 3வது அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
3வது அலைக்கு மத்தியில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து அந்த இடத்தை பயோ-பபுள் சூழலுக்குள் கொண்டுவர வேண்டும்.
அந்த வகையில் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 1,409 ஊழியர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை கடந்த 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை செய்யப்பட்டது. இதில் 402 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, இந்த 402 ஊழியர்களின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்காக, ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருக்கிறதா எனக் கண்டறிய ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விடாது கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே பணியாற்றும் ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா பரிசோதனை எடுக்கவில்லை. இரு அவைகளிலும் பணியாற்றும் ஏராளமான ஊழியர்கள் , கரோனா உறுதி செய்யப்பட்ட தங்களின் சக ஊழியர்களுடன் தொடர்பில் இருந்ததால், முன்னெச்சரிக்கையாக அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மக்களவை, மாநிலங்களவையில் பணியாற்றும் அதிகாரிகளும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதம் மட்டும் அலுவலகத்துக்கு வந்தால் போதுமானது என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இது தவிர, ஊழியர்கள் பயோ-மெட்ரிக் வைப்பதிலிருந்தும் விலக்கு தரப்பட்டுள்ளது.