26.8 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இந்தியா

கணவனிற்கு ஒரு பிள்ளை; காதலனிற்கு ஒரு பிள்ளை; ஒரே நேரத்தில் இருவருக்கும் அல்வா: சினிமா பாணியில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம்!

கணவனையும், கள்ளக்காதலனையும் ஒரே நேரத்தில் ஏமாற்ற, வைத்தியசாலைக்குள் தாதியாக வேடமிட்டு நுழைந்து, குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிக்ரொக் மூலம் அறிமுகமானவருடன் காதலில் வீழ்ந்து, வெளிநாட்டிலுள்ள கணவனிற்கு துரோகமிழைத்து, தனது வாழ்க்கையையும் படுகுழிக்குள் தள்ளிய குடும்பப் பெண் பற்றிய திகில் கதை இது.

கேரள மாநிலத்தில் உள்ள வண்டிப்பெரியாறு, வழியத்தாரா பகுதியை சார்ந்தவர் ஸ்ரீஜித். இவரின் மனைவி அஸ்வதி. அஸ்வதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக அவரை கோட்டயம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதி செய்துள்ளனர். கடந்த 3 ஆம் திகதி அஸ்வதிக்கு குழந்தை பிறந்துள்ளது.

6ஆம் திகதி மாலை 3 மணியளவில் பிரசவ விடுதிக்குள் நுழைந்த தாதியொருவர், குழந்தைக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டுமென கூறி, அஸ்வதியிடமிருந்து குழந்தையை பெற்றுச் சென்றார்.

குழந்தையை மட்டும் பரிசோதனைக்கு கொண்டு சென்றதால் குழப்பத்திலிருந்த அஸ்வதி குடும்பத்தினர், மாலை 3.30 மணியளவில் வைத்தியர்களிடம் குழந்தை குறித்து கேள்வியெழுப்பினர்.

அப்படியொரு குழந்தையையும் தாம் பரிசோதனைக்கு எடுக்கவில்லையென வைத்தியர்கள் கூறிய பின்னர்தான், ஏதோ விபரீதம் நிகழ்ந்தது புரிந்தது.

உடனடியாக சிசிரிவி காட்சிகளை சோதனையிட்டதில், தாதிய உடையில் பருமனான பெண்ணொருவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியது தெரிய வந்தது.

வைத்தியசாலை நிர்வாகம் மாலை 4 மணிக்கு காந்தி நகர் பொலிசாருக்கு அறிவித்தனர்.

கேரளாவில் அண்மையில் சில குழந்தை கடத்தல் சம்பவங்கள் விவகாரமாகியிருந்ததால், பொலிசார் முழு வீச்சில் நடவடிக்கையில் இறங்கினர்.

மாவட்டம் மற்றும் மருத்துவமனையைச் சுற்றியுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

கடத்தல் நடந்து சிறிது நேரமே ஆகியிருந்ததால், மருத்துவக் கல்லூரி பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் போலீஸ் குழுக்கள் மூலம் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள மெடிக்கல் ஷாப் ஊழியர்களிடம் கூட குழந்தையை கண்காணிக்குமாறு கூறப்பட்டது.

இதேவேளை, மருத்துவமனையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பார்க் ஹோட்டலில் இன்னொரு சம்பவம் நடந்தது.

அந்த ஹோட்டலில் தங்கியிருந்த பெண்ணொருவர், அறையை காலி செய்தார். தான் உடனடியாக வெளியேற வேண்டுமென்றும், பயணிப்பதற்கு ஏதாவது ஆட்டோரிக்ஷா கிடைக்குமா என முகாமையாளரிடம் கேட்டார். வழக்கமாக ஹோட்டல் வாடிக்கையாளர்களிற்காக அழைக்கும் ஆட்டோரிக்ஷா ஓட்டுனர் வில்சனை முகாமையாளர் தொடர்பு கொண்டு, வரவழைத்தார்.

ஆட்டோரிக்ஷாவில் வில்சன் அங்கு வந்தார்.

தனது வாடிக்கையாளர் ஒரு கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுவனுடன் நிற்பதை பார்த்த போது அவரது மனதில் சந்தேகம் பிறந்தது. காரணம், சற்று முன்னர்தான் குழந்தையை தேடி பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கை அந்த பகுதி முழுவதையும் பரபரப்பாக்கியதுடன், உள்ளூர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் குழந்தையை கடத்திய பெண்ணின் சிசிரிவி காட்சிகளும் பகிரப்பட்டிருந்தன.

அவர் தனது சந்தேகத்தை, ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்தார். நிர்வாகமும், உடனடியாக பொலிசாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த பெண்ணிடமிருந்தது கடத்தப்பட்ட குழந்தையென்பது தெரிய வந்தது.

கடத்தப்பட்ட 2 மணி நேரத்திலேயே குழந்தை மீட்கப்பட்டு, தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.

மீட்கப்பட்ட குழந்தை தாயாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது

குழந்தையை கடத்திய நீத்து (33) என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவர் தனது 10 வயது மகனுடனேயே கடத்தலிற்கு வந்திருந்தார்.

அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தை கடத்தல் ஏன் நடந்தது என்பது ஒரு சினிமா பட பாணியில் அதிரடித் திருப்பங்களுடன் தெரிய வந்தது.

செங்கனூரை சேர்ந்த ராஜேந்திரன் நாயர் மற்றும் அனிதா தம்பதியின் மகள் நீத்து (33). இவர் பொருளாதார ரீதியாக நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். திருவல்லாவைச் சேர்ந்த சுதி என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் போது அவருக்கு இருநூறுக்கும் மேற்பட்ட சவரன் தங்கம் வழங்கப்பட்டது. கணவர் சுதி கத்தாரில் உள்ள எண்ணெய் சுரங்க நிறுவனமொன்றில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

நிகழ்வு மேலாண்மை (event management) வேலை தொடர்பாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியில் வசிக்கத் தொடங்கினார் நீத்து. சுதி டிசம்பர் மாதங்களில் விடுமுறைக்கு வருவார். இந்த நேரமெல்லாம் குட்டூரில் உள்ள தனது கணவர் வீட்டில் நீத்துவும் அவரது மகனும் இருந்தனர். இம்முறை சுதி நவம்பரில் விடுமுறையில் வந்தார். அங்கு கணவர் வீட்டில், நீத்துவும் மகனும் தங்கியிருந்தனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுதியின் பெற்றோர் தெரிவித்தனர்.

சுதி இரண்டு வாரங்களுக்கு முன்பு கத்தார் திரும்பினார்.

சில வருடங்களின் முன்னர் நீத்து ரிக்ரெக் மூலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த இப்ராகிம் பாதுஷாவுடன் அறிமுகமாகினார்.

இப்ராகிம் பாதுஷாவால் நடத்தப்படும் ஈவென்ட் மனேஜ்மென்ட் நிறுவனத்தில் நீத்து பணிபுரிந்தார். நீத்து நல்ல வசதியானவர். நிறைய கை அணிந்திருப்பார். நீத்துவை மடக்கினால், ஓவர் நைட்டில் ஒபாமா ஆகி விடலாமென் இப்ராகிம் பாதுஷா கணக்குப் போட்டார்.

நீத்துவின் மனதிற்குள் எப்படியோ இப்ராகிம் நுழைந்தார். இருவரும் நெருக்கமாகி, கள்ளக்காதலர்களானார்கள்.

இருவரும் பிளாட்டில் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். தனது கணவர் வெளிநாட்டு கப்பல் நிறுவனத்தில் வேலை செய்வதாக அயலிலுள்ளவர்களிடம் கூறிய நீத்து, இப்ராஹிம் பாதுஷாவை மைத்துனர் என அறிமுகப்படுத்தியிருந்தார். சில மாதங்களில் நீத்து கர்ப்பமானார். இப்ராஹிமின் அறிவுறுத்தலின் பேரில் அவர் கருக்கலைப்பு செய்தார்.

பின்னர் இருவரும் இணைந்து மற்றொரு நிறுவனத்தைத் தொடங்கினார்கள். வியாபார நோக்கத்திற்காக நீத்துவிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகளை அடிக்கடி பறித்து சென்றுள்ளார்.

நீத்து மீண்டும் கர்ப்பமானார். ஆனால், காதலரின் அனுமதியின்றி அதை கலைத்து விட்டார்.

இதற்குள், நீத்துவிடமிருந்து கறப்பதையெல்லாம் கறந்து விட்டு, அவரை கழற்றி விட இப்ராஹிம் முயன்றார். அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார் என்ற தகவல் கிடைத்து, நீத்து கோபமடைந்தார்.

தான் கர்ப்பமாக இருப்பதாகவும், கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இப்ராகிம் பாதுஷாவிற்கு தகவல் அனுப்பினார். அதைத் தொடர்ந்து குழந்தையை கடத்திச் சென்று அது தனது குழந்தை என்று நம்ப வைக்க திட்டமிட்டுள்ளார்.  இதன்மூலம், இப்ராஹிம் பாதுஷா வேறு பெண்ணை திருமணம் செய்வதை தடுத்து, தான் திருமணம் செய்யலாமென நம்பினார்.

நீத்து ஜனவரி 4ஆம் திகதி கோட்டயம் வந்து அங்கு அறை எடுத்து தங்கினார். கூடவே மகனையும் அழைத்து வந்தார்.

6ஆம் திகதி அவர் மகப்பேறு விடுதிக்கு சென்று, தாயாரை ஏமாற்றி  ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டு சென்றார். ஹொட்டல் அறைக்கு குழந்தையை கொண்டு சென்று புகைப்படம் எடுத்து, ‘நமது குழந்தை’ என தனது காதலருக்கு வட்ஸ்அப்பில் அனுப்பினார்.

இந்த கடத்தல் வழக்கில் இப்ராஹிம் பாதுஷாவிற்கு தொடர்பில்லையென்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும், நீத்துவின் மகனை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் அவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். நீத்துவை போல வேறு பெண்களின் வாழ்க்கையில் விளையாடி, நகை, பணம் பறித்தாரா என்றும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

நீத்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

புதிய காதலியுடன் திருமணம்; லிவ் இன் பார்ட்னரை 40 துண்டுகளாக வெட்டியெறிந்த இறைச்சிக்கடைக்காரன்!

Pagetamil

Leave a Comment