ஒரு சில அரசியல் தலைமைகள் தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து வந்துள்ளனர் என முன்னாள் அமைச்சரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்ட ‘பிரபஞ்சம் செயற்திட்டம் நேற்று சனிக்கிழமை (08) மதியம் மன்னார் எருக்கலம் பிட்டி மத்திய மகளிர் மகாவித்தியாலயத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன் 500 மில்லியன் டொலர் கடன் கட்ட வேண்டியவர்களாக இந்த அரசு இருக்கின்றது.
இந்த வருட இறுதிக்குள் இந்த நாட்டிற்கு என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாத ஒரு அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலை பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நாட்டினுடைய நலனுக்காகத்தான் இந்த நாட்டின் வரலாற்றில் நாங்கள் எல்லோரும் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் ஒரு சில அரசியல் தலைமைகள் இனவாதத்தையும்,மதவாதத்தையும் கக்கி இனவாத,மதவாத சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்தி, தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து வந்துள்ளதை நாங்கள் பார்க்கின்றோம்.
இனவாதமும்,மதவாதத்தையும் மூலதனமாக கொண்ட அரசாங்கம் தான் இந்த இரண்டு வருட காலத்துக்குள் இவ்வாறான,மோசமான நிலைக்கு இந்த நாட்டை கொண்டு சென்றுள்ளார்கள் என்பது எம் எல்லோருக்கும் தெரியும்.
இன்று விவசாயிகள் வீதியில் இறங்கி போராடுகின்றார்கள்.தங்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க விடுங்கள்.
தமது விவசாயத்திற்கு தேவையான பசலை யை தாருங்கள் என்று வீதியில் போராடுகின்ற ஒரு மோசமான நிலை இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.கேசினை பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கின்றனர்.ஒரு நாள் வேலையை விட்டு கேசினை பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு,நினைக்க முடியாத அளவிற்கு பொருட்களின் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நானும் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அவர்களும் ஒரே அமைச்சில் அமைச்சர்களாக இருந்தோம்.அவர் இராஜாங்க அமைச்சராக இருந்தார்.
எங்களில் ஒரு வருடங்கள் இல்லை இரண்டு வருடங்களாக கேஸ் நிறுவனத்தினர் வந்து 250 ரூபாய் கூட்டித்தாருங்கள் என்று கேட்டார்கள்.
கடைசியாக 100 ரூபாய் கூட்டித்தாறுங்கள் என்று கேட்டனர். நாங்கள் கூறினோம் ஒரு ரூபாய் கூட கூட்டித்தர முடியாது.
உலகச் சந்தையில் இந்த விலை. நீங்கள் 100 ரூபாய் கூட்டித்தர கேட்டால் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் இதனால் பாதிக்கப் படுவார்கள் என்று கூறினோம். மாவின் விலையை கூட்டுவதற்கு இலங்கையில் உள்ள இரண்டு கம்பனியினர் எங்களிடம் வந்து கேட்டார்கள்.6 ரூபாய் கூட்டி கேட்டார்கள். அதற்கு நான் இருக்கும் வரை ஒரு ரூபாய் கூட கூட்ட அனுமதிக்க மாட்டேன் என்றேன்.
அதே போன்று தான் 100 ரூபாய்க்கு சீனியையும், அரிசியை 70 ரூபாய் வரைக்கும், பருப்பு 120 ரூபாவிற்கு விற்றோம். இவ்வாறு ஒரு மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டோம். பொருட்களின் விலையை இந்த நாட்டில் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தோம்.
ஆனால் இன்று இனவாதத்தையும்,மதவாதத்தையும் மூலதனமாக கொண்டு வந்த இந்த அரசு இன்று பொருட்களின் விலையை அரசாங்கம் அல்ல,அமைச்சர்கள் அல்ல பொருட்களின் விலையை கடை முதலாளிகள், வியாபாரிகள் தீர்மானிக்கின்ற நிலைக்கு இந்த நாடு மோசமடைந்துள்ளது.
எனவே எம்மிடம் உள்ள ஒரே ஒரு ஆயுதம் பிரார்த்தனை. இந்த பிரார்த்தனை ஊடாக இந்த நாட்டிற்கு நல்லதொரு ஆட்சிக்காக எல்லா இனத்தையும் சமமாக மதிக்கின்ற நல்லாட்சிக்காக , எல்லா இனமும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஆட்சிக்காகவும், நமது பொருளாதாரம் மேம்பட்டு,நமது பிள்ளைகள் நாளை ஏழைகளாக மாறிவிடாது, பசியிலும்,பஞ்சத்திலும் வாழ்ந்திடாமல் நிம்மதியாக வாழ்ந்திட நல்லதொரு ஆட்சிக்காக நாம்.எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போம் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உரை நிகழ்த்தினார்.