எஸ்.மிதுனரூபன் (24)
ஒட்டுசுட்டான்
கேள்வி: நான் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பகலில் வேலை முடித்த பின்னர், இரவில் தங்குமிடத்தில் நண்பர்கள் ஒன்றாக தங்குவோம். அங்கு தினமும் ஆபாசப்படம் பார்ப்போம். ஆபாசப்படம் அடிக்கடி பார்ப்பது பிரச்சனையை ஏற்படுத்துமென சில நண்பர்கள் சொல்கிறார்கள். உண்மையா?
டாக்டர் ஞானப்பழம்: ஆபாசப்படங்களை ஒருமுறையேனும் பார்க்காதவர்களே இல்லை என்கிற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றில் ஆபாசப்படங்கள் பார்ப்பதால் கிடைக்கிற நன்மை, தீமைகள் குறித்த ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் தெரிந்ததாம், அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆபாசப்படங்கள் பார்க்காதவர்கள் யாருமே இல்லை என்பது. அது சிலமுறையா அல்லது பலமுறையா என்பதில் மட்டும்தான் வித்தியாசம் இருந்திருக்கிறது. இது ஏதோ அமெரிக்காவில் மட்டுமென்றோ, அந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டுமென்றோ நினைத்துவிட வேண்டாம். ஸ்மார்ட்போன் காரணமாக உலகம் முழுக்க கிட்டத்தட்ட இந்த நிலைதான்.
தங்களுடைய பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப்படங்களில் தீர்வு தேடுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.
தவிர, ஆபாசப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தீமை நடக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், போர்னோகிராபி இண்டியூஸ்ட் எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (PIED) என்றொரு பிரச்னை வரலாம்.
சினிமாவில் 50 பேரை ஒரு கதாநாயகன் அடித்து நொறுக்குவார். ஆனால், யதார்த்தம் அப்படி கிடையாதே… இதைப்போலவே, ஆபாசப்படங்கள் பார்க்கும்போது கிடைக்கிற அளவுக்கதிகமான கிளர்ச்சி, செக்ஸின் மீது வருகிற வெறியூட்டும் தன்மை மனைவியுடன் உறவுகொள்ளும்போது கிடைக்காது. இதனால், தான் தாம்பத்திய வாழ்க்கைக்கு ஃபிட் இல்லையோ என்கிற தாழ்வு மனப்பான்மை ஆணுக்கு வந்து விடுகிறது. சிலருக்கு, ‘அந்தப் படத்தில் வருகிற பெண்ணுக்கு இருப்பதுபோன்ற உறுப்பின் அளவு என் மனைவிக்கு இல்லையே’, ‘அந்த நாயகனுக்கு இருப்பதுபோன்ற உறுப்பின் அளவு எனக்கு இல்லையே’ என்கிற வருத்தம் வந்துவிடுகிறது. இது ஒருகட்டத்தில், தம்பதியருக்கு இடையே சண்டை சச்சரவை ஏற்படுத்தி விடுகிறது.
அடிக்கடி ஆபாசப்படங்களைப் பார்த்து சுய இன்பம் செய்யும் ஆண்களின் இல்வாழ்வில் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் எண்ணிக்கை இயல்பைவிடக் குறைந்து விடும். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
ஆபாசப்படத்தால் தீமை நிகழ்வதற்கே மிக அதிகமான வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, இது ஊறுகாய் அளவில் உங்கள் திருமண வாழ்க்கையில் இடம்பெற்றால் பரவாயில்லை எனலாம். ஆனால், அந்த எல்லையில் யாருமே நிற்பதில்லை. அவ்வப்போது பார்ப்பது என ஆரம்பித்து, அடிக்கடி பார்ப்பது எனத் தொடர்ந்து, ஒருகட்டத்தில் ஆபாசப்படங்கள் பார்க்காமல் இருக்க முடியாது என்கிற அளவுக்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதே உண்மை. இதுவொரு மனநோய்.
இன்னும் சிலர், ஆபாசப்படங்கள் பார்ப்பதை ஒருவகையான பாலியல் கல்வி என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆபாசப்படங்களுக்கும் பாலியல் கல்விக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆபாசப்படங்கள் பாலியல் கல்விக்கு எதிரானவை. பாலியல் கல்வி என்பது, எப்படி செக்ஸ் வைத்துக்கொள்வதென்று சொல்லித் தருவதில்லை. படித்தவர்கள்கூட இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாலியல் கல்வி, ஆணும் பெண்ணும் பரஸ்பரம் அவர்களுடைய உறுப்புகளையும் உணர்வுகளையும் எப்படி மதிப்பது என்று சொல்லித்தரும். அதை முறையற்ற வழிகளில் அனுபவித்தால் பால்வினை நோய்கள் வரும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும். தவிர, வளரிளம் பருவத்தில் ஆரம்பித்து எல்லா வயதில் இருப்பவர்களும் பாலியல் தொடர்பாக தங்களுக்கு எழுகிற சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்கான வழி இந்தப் பாலியல் கல்வி. ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு உங்கள் உள்ளங்கையில் இருந்தாலும் அதைத் தவிர்ப்பதே நல்லது’
வி.காயத்திரி (25)
சாவகச்சேரி
கேள்வி: எனக்கு 5 மாதங்களின் முன் திருமணம் நடந்தது. கணவர் பிரான்ஸிலிருந்து 2 மாதங்கள் விடுமுறையில் வந்து திருமணம் செய்துவிட்டு சென்றார். நான் பிரான்ஸ் போன பின்னர்தான் குழந்தை பிரசவிப்பதென திட்டமிட்டிருந்தோம். அதனால் மாத்திரை பாவித்தேன். எனினும், இப்பொழுது எனக்கு கரு உண்டாகி விட்டது. ஏன் இப்படி நடந்தது?
டாக்டர் ஞானப்பழம்: மாத்திரை எடுத்துக்கொள்பவர் செய்யும் தவறுகள்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. நீங்கள் மாத்திரையைத் தவறாமல் எடுத்துக்கொண்டீர்களா என்ற தகவல் தெரியவில்லை. மாத்திரையைத் தவறவிடுவதுதான் மாத்திரை தோல்வியடைய முக்கியக் காரணமாக இருக்கிறது. மாத்திரை காலியாகிவிடுவது, மாத்திரை எடுப்பதால் ஏற்படும் தீவிர வாந்தி போன்ற காரணங்களால் மாத்திரை எடுத்துக்கொள்வதை சில பெண்கள் தவிர்க்கின்றனர். அல்லது தற்காலிகமாக நிறுத்திவிடுகின்றனர். இதன் காரணமாக கரு உருவாகிவிடுகிறது.
இந்த மாதிரியான மாத்திரை எடுக்கத் தவறிய நேரத்தில் இருந்து, 12 மணி நேரத்துக்குள் மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை எனில், அடுத்த ஏழு நாட்களுக்கு ஆணுறை போன்ற வேறு வகையான கருத்தடை முறைகளைப் பயன்படுத்தும்படி ஃபேமிலி பிளானிங் அசோசியேஷன் (எஃப்.பி.ஏ) அறிவுறுத்துகிறது. மாத்திரையைக் காட்டிலும் இன்னும் சில நம்பகமான கருத்தடை முறைகள் உள்ளன. எனவே, மாத்திரையைத் தவறவிடும் பெண்கள் இந்த முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.
மாத்திரை எடுக்க மறந்துவிட்டீர்கள், 5 – 10 மணி நேரம் கழித்து, அன்றைய தினமே நினைவுக்கு வருகிறது என்றால், உடனே மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாள் எடுக்க மறந்து, அடுத்த நாள் நினைவுக்கு வந்தால், அன்றைக்கு இரண்டு மாத்திரைகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, முந்தைய நாளுக்கான ஒரு மாத்திரை எடுத்துக்கொள்வதுடன், வழக்கமாக அன்றைய தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கவேண்டிய மாத்திரை ஒன்று என இரண்டு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு நாட்கள் மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை எனில், அவர்கள் ‘பாதுகாப்பு இல்லாத நிலை’ என்று அர்த்தம். வேறு வகையான கருத்தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அதன் பிறகு, அந்தப் பெண் அந்த மாதம் முடியும் வரை மாத்திரை எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை. அடுத்த மாதம் மாதவிலக்கு வந்த நாளில் இருந்து மாத்திரை எடுத்துக்கொண்டால் போதும்.
வாசகர்களே உங்களிற்கு ஏற்படும் சந்தேகங்களை என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து, தெளிவை பெற்றுக்கொள்ளுங்கள்.