தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகத்தான் எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினை கான முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பளை மத்திய கல்லுாரி இனறு (07) தேசியப் பாடசாலையாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் பளை மத்திய கல்லூரியும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டத்தில் எங்களது அரசு பாரபட்சமற்ற வகையில் மாகானங்களுக்கிடையில் மாவட்டங்களுக்கிடையில் இதனை நடைமுறைப்படுத்தி இருக்கின்றது.
இந்த பாடசாலை மட்டங்களில் மட்டுமல்ல ஏனைய விடயங்களிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நாடு தழுவிய ரீதியில் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை பாரபட்சமற்ற வகையில் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வழங்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் இந்த பாடசாலையும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அதற்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மக்கள் சார்பாகவும் நான் நன்றி கூறுகின்றேன்.
நாங்கள் பட்டறிவின் மூலம் பலதையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் எங்களுக்கு ஒரு ஆயுதப் போராட்டத்தின் தேவை இருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகத்தான் எங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கலாம் என்பதை முன்வைத்து நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
விரும்பியோ விரும்பாமலோ சுயலாப அரசியலுக்கும் அல்லது பயம் காரணமாகவோ அவர்களைப் பின்பற்றியதன் விளைவாக இருக்கின்ற நிலமைகளை இல்லாமல் செய்து விட்டார்கள். ஆனபடியால் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு தமிழ் மக்கள் நிறைய பலியாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். இந்த நிரந்தரமான சமாதானத்தை கொண்டு வந்ததற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் அப்போதைய பாதுகாப்பு செயலரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இலங்கையினுடைய தேசியக்கொடியே எங்களுடைய தேசியக் கொடியாக இருக்கின்றது இந்த கொடியின் கீழ் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.