வவுனியாவில் குடியிருப்பதற்கு வீடு இல்லை எனத் தெரிவித்து வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் அலுவலகத்தில் வீட்டுப் பொருட்களுடன் வந்து பெண் ஒருவர் தங்கியுள்ளார்.
நேற்று (04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தெர்டர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தோணிக்கல், ஆலடிப் பகுதியில் பிறிதொரு நபரின் வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவரை வீட்டு திருத்த வேலை காரணமாக குறித்த வீட்டு உரிமையாளர் வெளியேற்றியுள்ளார்.
இதனையடுத்து வாகனம் ஒன்றில் தனது வீட்டில் இருந்த பொட்களை ஏற்றிய குறித்த பெண் வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் தனது பொருட்களை இறக்கி வைத்து விட்டு அங்கு தங்கியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அறிந்து கொண்ட பதில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் குறித்த பெண்ணிடம் தகவல்களை பெற்று அவரின் நிலை தொடர்பில பிரதேச செயலாளர் மற்றும் பொலிசார் ஆகியோருக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பிரதேச செயலகத்தின் மகளிர் உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணின் நிலமைகளை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், பொலிசாரிடமும் தெரியப்படுத்தியிருந்தனர். குறித்த பெண் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வந்தையடுத்து மருத்துவ ஆலோசனையும் பெறப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் மகளிர் பொலிசாரின் உதவியுடன் குறித்த பெண்ணை இரவு 10 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவருடைய பொருட்கள் கிராம அலுவலர் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் பின் பெண் தங்குவதற்கான ஒரு இடம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.