வலிகாமம் வடக்கில் சைவ ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் காங்கேசன்துறை இராணுவ முகாமை சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிசாரால் நேற்று (3) இரவு இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டார்.
வலிகாமம் வடக்கிலுள்ள சைவ ஆலயங்களில் இருந்து கடவுள் விக்கிரகங்கள், சிலைகள் திருடப்படும் விவகாரம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்திருந்தது.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிசார், கொழும்பிற்கு கடத்தப்பட்ட சுமார் 20 விக்கிரகங்களை மீட்டனர்.
விக்கிரம திருட்டுன் தொடர்புடைய பழைய இரும்பு வியாபாரியான, நல்லிணக்கபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதானார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நவாலியை சேர்ந்த மற்றொருவர் கைதானார்.
அவர்களின் வாக்குமூலத்தில், இந்த திருட்டு விவகாரத்தில் இராணுவச்சிப்பாய்கள் சிலர் தொடர்புபட்டிருந்தது தெரிய வந்திருந்தது.
இதனடிப்படையில், நேற்று காங்கேசன்துறை இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார்.