எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம் பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களினால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை நான் வன்மையாக கண்டிப்பதோடு, குறித்த பட்ட திருவிழாவானது வல்வெட்டித்துறை மண்ணுக்குள்ள பெருமையுடன் நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் பட்டத்திருவிழாவில் இம்முறை அமைச்சர் நாமல் ராஜபக்சவை அழைக்க, சிறு குழுவொன்று ஏற்பாடு செய்துள்ளது. தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில் அந்த குழு, இந்த முடிவை எடுத்துள்ளதாக வல்வெட்டித்துறை மக்கள் மத்தியிலும் கடுமமான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த குழுவின் முடிவிற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று (4) விடுத்துள்ள ஊடக அறிக்கையில்-
நீண்ட இனவழிப்பையும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் முறையற்ற விதத்தில் பறிப்பதும் என கொடூர ஆட்சி நடத்தும் இந்த அரசாங்க அமைச்சர்களின் பிரசன்னத்துடன் அவர்களின் அனுசரணையுடன் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம் பெறவுள்ள பட்ட திருவிழாவானது வல்வெட்டித்துறை மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.
எதிர் வரும் பெப்ரவரி மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் எழுத்து மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலையை நடத்திய ராஜபக்ச குடும்பத்தினரை பிரதம விருந்தினராக அழைத்து இந்த பட்டத் திருவிழா நடத்துவது 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையை சர்வதேச அரங்கிலிருந்து இல்லாது செய்வதற்குரிய அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கையே இது.
நீண்ட காலமாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் முயற்சி வீண் போகும் வகையில் இந்த செயல்பாடு சர்வதேசத்தின் உடைய பார்வை இனப்படுகொலை புரிந்தவர்களை அழைத்து இந்த பட்டத்திருவிழாவை நடாத்துவதானது சர்வதேச அரங்கிலிருந்து இலங்கை அரசாங்கத்தை தப்பிப்பதற்கு உரிய சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்கும்.
ஆகவே ஏற்பாட்டாளர்கள் இதை கவனத்தில் கொண்டு பட்டத்திருவிழா அரசியல் கலப்படமற்ற வகையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
உடனடியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த புதிய நடைமுறையை கைவிட்டு இந்த மண்ணில் கால காலமாக நடைபெற்று வரும் பட்டத் திருவிழா போன்று இம்முறையும் நடைமுறைப்படுத்த முன்வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.என குறிப்பிடப்பட்டுள்ளது.